எட்டுவழிச்சாலைத் திட்டத்தால் மக்களுக்கு எந்தப்பயனும் இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும்தான் பயன் தரும் என்று அன்புமணி ராமதாஸ் எம்பி கூறினார்.
பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அக்கட்சி எம்பி அன்புமணி ராமதாஸ், திங்கள்கிழமையன்று (டிசம்பர் 24, 2018) சேலம் வந்திருந்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கர்நாடகா அரசு, மேகதாதுவில் அணை கட்ட முதல்கட்ட ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது. தேர்தல் ஆதாயங்களுக்காக மத்திய அரசு இவ்வாறு நடந்து கொள்கிறது.
தமிழக அரசு உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட பகுதி என சட்டம் கொண்டு வர வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பது ஆளுங்கட்சி நடத்தும் நாடகம். ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பயன் இல்லாமல் போய்விடும். இதற்கு தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம் & சென்னை எட்டுவழிச்சாலை தேவை இல்லாதது. இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும்தான் இந்த திட்டத்தால் பயன் உள்ளது.
மேட்டூர் உபரிநீர் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். முதல்வர் அறிவிப்புகள் மட்டுமே வெளியிட்டு வருகிறார். ஆனால், அவருடைய அறிவிப்புகள் எதுவும் செயல்பாட்டில் இல்லை. சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கக்கூடாது. இந்த உருக்காலைக்காக கையகப்படுத்தி, இதுவரை பயன்படுத்தாமல் உள்ள நிலத்தை மீண்டும் விவசாயிகளுக்குத் திருப்பித்தர வேண்டும்.
உயர்மின் கோபுரம், எட்டுவழிச்சாலை உள்ளிட்ட விவகாரத்தில் விவசாயிகளிடம் குறைந்தபட்சம் பேச்சுவார்த்தையாவது நடத்த வேண்டும். பொன்.மாணிக்கவேல் உண்மைகளை கண்டுபிடித்து வருகிறார். மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில்தான் அவரை மாற்றி சிபிஐ விசாரணை வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுவரையில் நாங்கள் தேர்தல் கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான், எங்கள் நிலைப்பாட்டை அறிவிக்க முடியும். அதுவரை எங்களைப் பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.