அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (21-12-24) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “கேள்வி கேட்டால் என் மீது முதல்வர் பழி போடுகிறார். அண்டை மாநில மருத்துவக் கழிவு கொட்டப்பட்டதை கூட திமுக அரசால் தடுக்க முடியவில்லை. மக்கள் பிரச்சனையை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து முதல்வர் தேவையில்லாத கருத்துக்களை கூறி வருகிறார். செம்பரம்பாக்கன் ஏரி திறப்பால் பாதிப்பில்லை. அதிக மழைதான் பாதிப்புக்கு காரணம்.
இந்தியா கூட்டணியில் இருந்துகொண்டு திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்ன திமுக அரசு என்ன செய்தது?. திமுக, காங்கிரஸ் ஆட்சி காலத்தின் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால், இப்போது வெள்ளை குடை பிடித்து பிரதமரை திமுக அரசு வரவேற்றது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைதான் திமுக திறந்து வைக்கிறது. அம்பேத்கரை அமித்ஷா உள்ளிட்ட யார் அவதூறாக பேசினாலும் தவறுதான்.
டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக, மத்திய சுரங்க துறை அமைச்சகம் பிப்ரவரியில் ஒப்பந்தம் போடும்போது தமிழக அரசு எதிர்க்கவில்லை. ஒப்பந்தம் போடப்பட்டு 10 மாதங்கள் திமுக அரசு என்ன செய்து கொண்டிருந்தது?. டங்ஸ்டன் சுரங்கம் குறித்து முதல்வரிடம் தெளிவான பதில் இல்லை, மழுப்பலான பதில் மட்டுமே உள்ளது. டங்ஸ்டன் சுரங்கம் தீர்மானத்தின் மீது சரியான வாதத்தை சட்டமன்றத்தில் முன் வைத்தேன்.
அரசு நிகழ்ச்சியில் டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில், அரசு தவறை மறைக்கும் விதத்தில் முதலமைச்சர் பேச்சு இருந்தது. சுரங்கம் அமைந்தால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து மக்களுக்கு தெரிவிக்காமல் மறைத்தது தி.மு.க. மக்கள் கொதித்து எழுந்த பிறகு தான் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. சுரங்கம் மசோதா நாடாளுமன்றத்தில் வந்த போது திமுக தரப்பில் எந்த எதிர்ப்பும் பதிவு செய்யவில்லை” என்று கூறினார்.