
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜெயங்கொண்டம் மற்றும் காட்டுமன்னார்குடி சுற்று வட்டார பகுதியில் ஒரே நாள் இரவில் 30 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்தது. இதனால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனையொட்டி ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் காட்டுமன்னார்குடி, குமராட்சி, வீரநத்தம், எள்ளேரி, திருநாரையூர், கீழ வன்னியூர், மேல வன்னியூர், வீரநத்தம், வீராணம் ஏரிக்கு மேல் புறம் சித்தமல்லி, அறந்தாங்கி, பாபுத்தூர், அகர புத்தூர், மடப்புரம், வீராணம் நல்லூர், 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுவதுமாக வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் இப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விளை நிலங்கள் பாதிப்படைந்தது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வீடுகளுக்கும் ரூ 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விளைநிலங்களுக்கு ரூ 30 ஆயிரம் ஏக்கருக்கு இழப்பீடு வழங்க வேண்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காட்டுமன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காட்டுமன்னார்குடி வட்டச் செயலாளர் தேன்மொழி தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், பிரகாஷ், குமராட்சி ஒன்றிய செயலாளர் மனோகர், மூத்த தலைவர் மகாலிங்கம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மழை வெள்ளத்தால் இறந்த கால்நடை மாடுகளுக்கு ரூ 40 ஆயிரம், ஆடுகளுக்கு ரூ 20 ஆயிரம், கோழிகளுக்கு ரூ 500 எனவும் முழுவதும் சேதமடைந்த வீடுகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்கிட கேட்டுக்கோசங்களை எழுப்பினார்கள் இதனைத் தொடர்ந்து இது குறித்த கோரிக்கை மனுவை காட்டுமன்னார்குடி வட்டாட்சியரிடம் வழங்கினர் அவர் இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.