தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம் என ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமாக இருந்த ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
13 அப்பாவி மக்களின் உயிர் பறிக்கப்பட்டு இருப்பதை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். ஆனால், இந்த சம்பவம் எங்களது ஆலையில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் நடந்துள்ளது. எங்களது வேதாந்தா நிறுவனம் மனிதாபிமான விவகாரங்களில் பொறுப்புள்ள இந்திய தொழில் நிறுவனம் ஆகும். நாங்கள் இதில் உயிர் இழந்தவர்கள் குடும்பம் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம்.
மே 22-ந் தேதி ஏதோ நடக்கப் போகிறது? என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது. நாங்கள் இது சம்பந்தமாக நீதிமன்றத்தை அணுகினோம். நீதிமன்றம் உள்ளூர் நிர்வாகத்திடம் தகவல் கூறி உரிய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தது. அதன்படி 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் இந்த போராட்டத்திற்கு முக்கிய காரணம். இதில், சில சக்திகள் தூண்டுகோலாக இருந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அவர்கள் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். போராட்டம் தொடங்குவதற்கு முன்பே இந்த சக்திகள் இதே போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
நாங்கள் சம்பந்தப்பட்டவர்களை நேரடியாக ஆலைக்கு வந்து பாருங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தோம். அதுபோல் பல தலைவர்களையும், போராட்ட அமைப்பினரையும் அழைத்தோம். ஆனால், யாரும் உள்ளே வந்து பார்வையிடவில்லை. தூத்துக்குடி மக்களுக்கு இதுபற்றிய அனைத்து விவரங்களையும் தருவதற்கு தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.