ஒரு குடும்பம் நல்ல முறையில் வாழ்வதற்கும், முன்னேறுவதற்கும் அக்குடும்பத்தின் சுமை தாங்கியாக செயல்படும் குடும்ப தலைவனின் அல்லது தலைவியின் செயல்பாடு மற்றும் நடவடிக்கையே காரணமாக அமைகிறது என்ற மூத்தோர் சொல் தமிழர்களின் வாழ்க்கையோடு கலந்துள்ளது. குடும்பம் என்றாலும் அது தான், ஒரு கட்சியை நடத்தும் தலைவர் என்றாலும் அதுதான். ஆட்சியை நடத்தும் முதல்வருக்கும் அது பொருந்தும். அப்படிப்பட்ட முதல்வரின் வழியில்தான் அரசு நிர்வாகம் பல துணிச்சலான செயல்பாடுகளை செய்து வருகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் புதிய ஆட்சியர்கள் நியபிக்கப்பட்டனர். அப்படி பொறுப்பேற்ற புதிய ஆட்சியர்கள் இருவரின் செயல்பாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கைகாட்டிய வழியை காட்டுகிறது. ஒருவர் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஐ.ஏ.எஸ். இவர், ஆட்சியார் பொறுப்பேற்றவுடன் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கரோனா நோயாளிகள் வார்டுக்கு நேரில் சென்றார்.
அதே போல் மற்றொருவர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி. இவரும், பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்பால் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் வார்டுக்கு நேரில் சென்றார். இரண்டு கலெக்டர்களும், பாதுகாப்பு கவச உடை அணிந்து சென்று நோயாளிகளிடம் நான் இந்த மாவட்ட கலெக்டர். உங்களை காண நேரில் வந்துள்ளேன் என கூறியதுடன், அவர்களின் சிகிச்சை முறைகள் பற்றியும் கேட்டறிந்தனர். மேலும், விரைவில் நலம் பெறுவீர்கள் என்ற ஆறுதல் வார்த்தைகளும் கூறியுள்ளனர். ஏதாவது தேவை இருக்கிறதா கேளுங்கள் என்றும் கேட்டுள்ளனர். அதேபோல், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையுடன், கரோனாவிலிருந்து மீண்டு வாழமுடியும் என்ற நம்பிக்கை சிகிச்சையும் கொடுத்து வந்துள்ளார்கள்.
மருத்துவர், செவிலியர், பணியாளர் தவிர யாரும் உள்ளே வராத அந்த பூட்டப்பட்ட படுக்கை அறைகளுக்குள் மாவட்ட ஆட்சியர்கள் வந்து நலம் விசாரித்தது சுவாசிக்கும் காற்று சீராக செல்வதற்காக போராடும் அந்த மனித இதயங்கள் இந்த அரசு நம்மை காக்கும் என்று ஆனந்த நம்பிக்கை ஏற்பட வைத்திகுக்கிறது.
இப்போது இச்செய்தியின் முதல் வரிக்கு வருவோம், சில நாட்களுக்கு முன்பு கோவை சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்பு கவச உடை அணிந்து அங்குள்ள ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளை நேரில் சென்று பார்த்து "விரைவில் நலம் பெறுவீர்கள்.. உங்களை காப்பாற்ற எனது தலைமையிலான அரசு இருக்கிறது" என மிகப் பெரிய நம்பிக்கையை கொடுத்து வந்தார். இப்போது முதல்வர் வழியில் மாவட்ட ஆட்சியர்கள் நடை போடுகிறார்கள்.