
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பட்டாசு தயாரிப்பு ஆலைகள் அமைந்துள்ளன. இங்குப் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் அங்குள்ள பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் சாத்தூர் அருகே உள்ள முத்தாண்டிபுரம் என்ற கிராமத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குடோனில் எவ்வித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாகப் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பட்டாசு குடோனியில் இன்று (30.04.2025) அதிகாலை யாரும் எதிர்பாராத விதமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெம்பக்கோட்டை தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
நல்வாய்ப்பாக இதுவரை எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு வருவாய்த் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிவிபத்து அதிகாலையில் ஏற்பட்டதால் பட்டாசு குடோனில் யாரும் பணியில் இல்லை என்றும் கூறப்படுகிறது. பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.