
இந்தியா - பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. பாகிஸ்தானில் உள்ள சில பயங்கரவாத அமைப்புகளுக்கும், இந்திய ராணுவப் படையினருக்கும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்து வருகிறது. இதனால் ஜம்மு காஷ்மீர் பகுதியில், அதிகளவில் ராணுவப் படையினர் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில், நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். பஹல்காம் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த குதிரை ஓட்டி, திருமணமாகி தேனிலவுக்குச் சென்ற விமானப் படை அதிகாரி, கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் என பல கனவுகளோடு காஷ்மீருக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாத தாக்குதலில் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது நாட்டையே கலங்க வைத்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க தங்களது வேதனைகளைத் தெரிவித்து வருவது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. இந்த தாக்குதலில், ஆண்கள் மட்டும் குறிவைக்கப்பட்டதாகவும், இந்துவா? முஸ்லிமா? என்று மதத்தைக் கேட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வாயிலாக தகவல் வெளியாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊருக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்று முடிந்திருக்கிறது.
இந்த நிலையில் தாக்குதலில் உயிரிழந்தவர் ஒருவரின் மனைவி, தனது மகன் அப்பா எங்கே என்று அடிக்கடி கேட்பதாக கண்ணீர் மல்க வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பிடன் அதிகாரி என்பவர் தனது மனைவி மற்றும் 3 வயது குழந்தையுடன் அமெரிக்காவில் வசித்து வந்தார். இந்த சூழலில் கடந்த 8 ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்த அவர், தனது மனைவி மற்றும் மகனுடன் பஹல்காம் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போதுதான் மனைவி மற்றும் மகனின் கண்முன்னே கொடூரமாக பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து பிடன் அதிகாரியின் மனைவி கூறியபோது, “பயங்கரவாதிகள் என் குழந்தையின் கண் முன்னே என் கணவரை சுட்டுக் கொன்றனர். இப்போது, அப்பா எங்கே என என் மகன் அடிக்கடி கேட்கிறான். அப்பா இனி வரமாட்டார் என்று அவனிடம் எப்படி சொல்வது என்றே தெரியாமல் தவிக்கிறேன்” என்று மிகுந்த வேதனையில் தெரிவித்திருக்கிறார்.