
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்குச் சுற்றுலாச் சென்ற பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில், சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஒரு பயங்கரவாத கும்பல், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ளதால் பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையில் மத்திய அரசு எடுத்தது. அதே வேளையில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானும் தொடர் நடவடிக்கைகளை எடுத்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவும் சூழல் உருவாகியுள்ளது,
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடியின் இல்லத்தில் முக்கிய ஆலோசனை இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சிடிஎஸ் ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் இந்திய விமானப்படைத் தலைவர், விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதில் முப்படைகளுக்கும் முழு சுதந்திரத்தை தருவதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி , “எதிரிகள் மீது எந்த நேரத்தில் எந்த இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவது என்று முப்படைகளை முடிவு செய்து கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி மீண்டும் அவரச ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பெறுகிறது. இதற்கிடையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். நாளை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.