
மகனிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய ஊராட்சிமன்ற துணைத் தலைவரின் மனைவி பெசன்ட் நகர் கடற்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பல்லாவரம் அடுத்துள்ள பொழிச்சலூர் வஜ்ரவேல் தெருவைச் சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மனைவி பேசி டெய்சி ராணி. ஜோசப் பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில் கடந்த 21 ஆம் தேதி இளைய மகனிடம் கோபித்துக் கொண்டு டெய்சி ராணி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் டெய்சி வீட்டுக்கு வராததால் பல இடங்களில் குடும்பத்தார் அவரை தேடி வந்தனர். இதுகுறித்து சங்கர் நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது மகனிடம் கோபித்துக் கொண்டு வெளியே வந்த டெய்சி ராணி ஆட்டோ ஒன்றில் ஏறி செல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால் ஆட்டோவில் புறப்பட்டவர் அங்கிருந்து எங்கு சென்றார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தும் எந்தவித தகவலும் கிடைக்காமல் இருந்தது.
இந்நிலையில் இன்று காலை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் டெய்சி சடலமாக கிடந்துள்ளார். உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மகனிடம் கோபித்துக்கொண்டு வெளியேறிய டெய்சி ராணி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்தார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.