சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களான திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு அடுத்தபடியாக கரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களாக திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் போன்ற மாவட்டங்கள் உள்ளன. இதில் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் காலை முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள், வியாபார நிறுவனங்கள், உணவு விடுதிகள் திறக்க அனுமதி என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களால் உத்தரவிடப்பட்டது. அதன்படி செயல்பட்டு வந்தன.
இந்நிலையில் ஊரடங்கால் எந்த பயனுமில்லை என மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர். அதேபோல் பொருளாதாரம் படுபாதாளத்துக்கு போயுள்ளது, பொதுமக்களும் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனை அறிந்த அரசு, பெரிய அளவில் வியாபாரிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என எச்சரித்தது. அதனை தொடர்ந்து தற்போது வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கடைகள், வியாபார நிறுவனங்கள், உணவு விடுதிகள் திறக்கும், மூடும் நேரத்தில் மாறுதலை செய்துள்ளனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், ராணிப்பேட்டை ஆட்சியர் திவ்யதர்ஷினி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எல்லாவிதமான கடைகள் இயங்கலாம் என அறிவித்துள்ளனர். அதேபோல் உணவு விடுதிகள் இரவு 8 மணி வரை இயங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்களை மூடி சீல் வைப்பது, அதிகபட்ச அபராதம் விதிப்பது என மாவட்ட ஆட்சியரால் நியமனம் செய்யப்பட்டுள்ள பறக்கும் படை அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் மாஸ்க் அணியாத பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.