
ஒடிசா மாநிலம், சோனாபூர், நுகாட் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணாதீப்(20). இவர், கடந்த 2 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அடுத்துள்ள கைக்கோளபாளையம் பகுதியில் உள்ள பஞ்சு மில் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி, ஒடிசாவில் உள்ள கண்ணாதீப்பின் தாயார், அவருக்கு போன் செய்து, ஒரு மாத சம்பளத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு கண்ணாதீப், அதைச் செலவு செய்துவிட்டதாக கூற, தாயார் கடுமையாக தீட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கண்ணாதீப், அவர் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு அருகில் உள்ள ராசாகுளம் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கு போட்டுக் கொண்டுள்ளார்.
இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் கண்ணாதீப்பை மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கண்ணாதீப் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து, கண்ணாதீப்பின் பெற்றோர் ஒடிசாவிலிருந்து நேற்று பெருந்துறை வந்து அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.