
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு - பண்ருட்டி சாலையில் நேற்று இரவு நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு மாடுகளை ஏற்றி கொண்டு ஒரு டாட்டா ஏசி வாகனம் ஒன்று வெகு வேகமாக அவ்வழியே சென்றுள்ளது.
அதை வழிமறித்த போலீசார் டாட்டா ஏசி வாகனத்தில் இருந்த இருவர்களிடம் விசாரணை செய்துள்ளனர். அவர்கள் இருவரும் முரண்பாடாக பதிலளித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு போலீசார் அவர்களிடம் தனியே விசாரித்தபோது அவர்கள் இருவரும் பண்ருட்டி அருகே உள்ள அங்கு செட்டிபாளையத்தினை சேர்ந்த பூமாலை, சிவா ஆகிய இருவர் என்பது தெரியவந்தது.
இவர்கள் ஒரு பசு மாட்டையும், ஒரு காளை மாட்டையும் திருடி டாட்டா ஏசி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்ததும் போலீஸ் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்ததை பார்த்ததும் வாகனத்தை வேகமாக ஓட்டிச்சென்று தப்பிவிட முயற்சி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். டாட்டா ஏசி வாகனத்தை பறிமுதல் செய்துள்ள போலீசார் திருடப்பட்ட மாடுகளை உரிய விசாரணைக்கு பிறகு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்கான பணிகளை செய்து வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் வேப்பூர் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது இரவு நேரங்களில் ஆடுகளையும் மாடுகளையும் திருடிக்கொண்டு டாட்டா ஏசி வாகனங்களில் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது போலீசாரால் பிடிக்கப்பட்டுள்ள பூமாலை சிவா இருவரும் மேலும் இதுபோன்ற ஆடு, மாடு திருடிய சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்பதைப் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் உளுந்தூர்பேட்டை போலீசார்.