
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டு 6 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 19 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. இதில் கலைத்துறையில் நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் விருது வாங்குவதற்காக தனது குடும்பத்தினருடன் இன்று காலை விமானம் மூலம் அஜித் டெல்லி சென்றடைந்தார். நிகழ்வில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பத்ம விருதுகளை அறிவிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார். அப்போது அஜித் குமார் தனக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் கையால் பெற்றுக் கொண்டார். அவர் வாங்கிய போது அவரது மனைவி ஷாலினி மற்றும் அவரது குழந்தைகள் கைதட்டி மகிழ்ந்தனர்.
இந்திய அரசின் உயரிய விருதுகளின் ஒன்றாக பார்க்கப்படும் பத்ம பூஷன் விருதை அஜித் முதல் முறையாக பெற்றுக் கொண்டதால் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. முன்னதாக அறிவிக்கப்பட்ட போதே பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.