
ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேஷ்ராஜ்(40). இவரது மனைவி ஜானகி(30). இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணேஷ்ராஜ் அப்பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். ஜானகி வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று(28.4.2025) இரவு வழக்கம் போல வேலைக்கு சென்ற கணேஷ்ராஜ் வேலையை முடித்துக் கொண்டு நள்ளிரவு 12.15 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் கதவு வெளிபுறமாக தாழிடப்பட்டிருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த கணேஷ்ராஜ் கதவைத் திறந்து வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு அவரது மனைவி ஜானகி, தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து பெருந்துறை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ஜானகி உடலை மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஜானகி எவ்வாறு இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை முடிவில் தான் இது கொலையா அல்லது வேறு என்ன காரணம் என்று தெரிய வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.