
உலகம் வரை நாவினில் பரவிய இனிப்பு நெல்லை இருட்டுக்கடையின் அல்வா. நெல்லை டவுணின் நெல்லையப்பர் ஆலய வீதியில் அமைந்துள்ள அக்கடையின் இனிப்பு தற்போது விவகாரம் காரணமாக ஜீரணிக்க முடியாத கசப்பை உருவாக்கியிருப்பது தான் மனதை நெருடுகிற விஷயமாகியிருக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு நெல்லை மாநகர போலீஸ் கமிசனர் அலுவலகத்தில் இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளரான கவிதா சிங் தன்னுடைய புகார் மனுவைக் கொடுத்து விட்டு வந்தது தான் பரபரப்பாகியிருக்கிறது. அந்தப் புகாரில் பிப். 2 ஆம் தேதி எனது மகள் கனிஷ்காவுக்கும், கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கு தாழையூத்தில் திருணம் செய்து வைத்தேன். தரப்பட்ட அபரிமிதமான வரதட்சணைக்குப் பின்பும் பல்ராம் சிங் எங்களது இருட்டுக் கடை அல்வா கடையையும், அதன் டைட்டில் உரிமையையும் தன்னுடைய பெயருக்கு மாற்ற வேண்டும் என்பதை வரதட்சிணையாகக் கேட்கிறார்கள். எனது மகள் கனிஷ்காவிற்கும் எனக்கும் மிரட்டல் விடுக்கிறார். அவர்கள் டார்ச்சர் கடுமையாகத் தாக்குகிறது என்று புகாரில் சொல்லியிருப்பது தான் அல்வா நகரில் பரபரப்பைக் கொளுத்தியிருக்கிறது. இந்த நெருப்போடு அரசியல் புயலும் சேர பற்றி எரியத் தொடங்கியிருக்கிறது இருட்டுக் கடை விவகாரம்.
விவகாரத்திற்குள் பயணப்படும் முன் நான்கு தலைமுறை கடந்து நிற்கிற இருட்டுக்கடையின் மர்மங்களைக் குடைந்தெடுத்ததில் கிடைத்தவைகள் வாய் பிளக்க வைக்கின்றன. சோன்பப்டி, லாலா மிஸ்திரி, அல்வா போன்ற குறிப்பிட்ட இனிப்பு வகைகளை அசத்தலாகத் தயாரிப்பதில் குஜராத்தியினர் வல்லவர்கள். அப்படிப்பட்ட ருசியின் வரத்தைப் பெற்றவர்கள், அவர்களை மிஞ்சியவர்களில்லை. இந்த விஷயங்களை அந்தக் கால ஜமீன்தார்களே அறிந்து வைத்திருந்தார்கள். 1940களில் அப்போதைய பிரபலமான சொக்கம்பட்டி ஜமீன்தார் (தற்போதைய தென்காசி மாவட்டம்) தனது ஜமீனுக்கு இனிப்பு வகைகளைச் செய்து தருவதற்காக குஜராத்தைச் சேர்ந்த கிருஷ்ணசிங்கையும் அவரது மகன் பிஜிலி சிங்கையும் வரவழைத்தவர், தன் ஜமீனில் இடம் கொடுத்து தேவையான இனிப்பு வகைகளைத் தயார் செய்ய வைத்திருக்கிறார்.
சுமார் 70-80 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோமாக்ஸ் விளக்கு கொளுத்தப்பட்ட தள்ளுவண்டிகளில் தெருவெங்கும் மணிச் சத்தங்களைக் கிளப்பிக் கொண்டு லாலா மிஸ்திரி, சோன்பப்டி, அல்வா பதார்த்தங்களைக் கூவி விற்று வந்தவர்கள் குஜராத்திகளே. நாக்கில் நீர் போன்று கரைகிற இந்த பண்டங்களை தமிழகத்தில் இறக்குமதி செய்தவர்களும் அவர்கள் தான் என்பது கவனிக்கப்பட வேண்டியது.

1940ல் சொக்கம்பட்டி ஜமீன் வந்த கிருஷ்ணாசிங் தன் மகன் பிஜிலிசிங்குடன் சேர்ந்து இனிப்பு வகைகளோடு அல்வாவும் தயாரித்து ஜமீன்தார் வகையராக்களுக்குக் கொடுத்து வந்திருக்கிறார். அதன் பின் ஜமீனின் சம்மதத்தோடு 1950 நெல்லை வந்த கிருஷ்ணசிங் டவுணில் நெல்லையப்பர் ஆலயம் எதிரேயுள்ள கடை ஒன்றில் தங்களது தயாரிப்பு அல்வாவை விற்பனை செய்வதில் மும்முரமாகியிருக்கிறார்கள். மின்சாரம் அவ்வளவாக அறிமுகமில்லாத அந்தக் காலங்களில் மினுக்கென்று எரிகிற மண்ணெண்ணை சிம்னி விளைக்கை வைத்துக் கொண்டு மங்கிய வெளிச்சத்தில் அல்வா விற்பனையை செய்திருக்கிறார்கள். தென்பக்கம் புதியசரக்கு ‘அல்வா‘ மாலை வேளைகளில் விற்பனை சூடு பிடித்திருக்கிறது. பாதியிருட்டு என்பதால், அந்த இருட்டுக் கடை அல்வாண்ணே, கஸ்டமர்களிடையே சுரீரென்று பரவியிருக்கிறது.
தந்தை அல்வாக் கடையை நடத்த, அவர் மகன் பிஜிலி சிங் அப்போது சென்ட்ரல் எக்சைஸ் துறையில் சேவகராகப் பணியில் சேர்ந்திருக்கிறார். மண்ணெண்ணை விளக்கு காலம் போய் மின்சாரம் அறிமுகமான பின்பு கூட கடையை லைட்களால் வெளிச்சம் போட விரும்பாத கிருஷ்ணசிங், மின்சார காலத்தில் 40 வாட்ஸ் குண்டு பல்பையே வைத்து கடையின் அரையிருட்டையே தொடர்ந்திருக்கிறார். காரணம் இருட்டுக்கடை என்று பிரபலமாகி விட்டது. அதனால் வெளிச்சமாக்க மனமில்லாமல் ஊர்முழுக்கப் பரவிய இருட்டுக்கடை அடையாளப் பெயரை அப்படியே மெயின்டெய்ன் செய்திருக்கிறார்.

தந்தையின் மறைவிற்குப் பின்பு பொறுப்பிற்கு வந்த பிஜிலிசிங் தன் இருட்டுக்கடை அல்வா வியாபாரத்தை டிப்பார்ட்மெண்ட்டின் அனுமதியோடு தொடர்ந்து நடத்தி வந்திருக்கிறார். அது சமயம் கூட எக்ஸைஸ்துறையின் காக்கி யூனிபார்மை அணிந்தபடியே கடை வியாபரத்தை மேற்கொள்வாராம்.
தன் தந்தையின் காலந்தொட்டு தன்னுடைய காலம் ஆரம்பிக்கும் போது கூட அல்வாவின் தரத்தை பல வழிகளிலும் உயர்த்தியிருக்கிறாராம் பிஜிலி சிங். அதன் பலனே இருட்டுக் கடை அல்வா என்ற பெயர் நாடு கடந்து உலகம் வரை பரவியிருக்கிறது. நெல்லை வருகிற தமிழகத்தின் பிற பகுதியினர் வி.ஐ.பிக்கள், வெளியுலக டூரிஸ்ட்கள் என்று சகலரும் இருட்டுக்கடையை எட்டிப் பார்த்து, அதன் தயாரிப்பு சுவையை ருசிக்காமல் சென்றதில்லையாம். காரணம் அருகிலுள்ள உலகப் பிரபலமான நெல்லையப்பர் ஆலயம். அன்றாடம் தமிழக பக்தர்களும், வி.வி.ஐ.பி.க்கள், வெளிநாடு டூரிஸ்ட்கள் என்று நெல்லையப்பர் ஆலயம் பூஜைகள் வழிபாட்டுப் பரபரப்பிலிருக்கும்.
இருட்டுக்கடை என்று உலக அளவில் பெயராகிப் போனதால், அதன் அடையாளத்தை மாற்றவிரும்பாத பிஜிலி சிங் இருட்டுக்கடைப் பெயரையும் குண்டு பல்பையும் தனது டைட்டிலாகவும் வியாபார முத்திரைக்கான அடையாளமாகவும் உரிமையாக்கியிருக்கிறார். ஏனெனில் அப்போதைய காலங்களில் நெல்லையின் பிற இடங்களிலும் புராதன அல்வா சுவீட் கடைகள் பளிச்சென்று செயல்பட்டு வந்ததால், தனது மார்க்கெட்டிங் பிரபலம் பொருட்டு இருட்டுக் கடையின் டைட்டிலை அப்படிப் பாதுகாத்திருக்கிறார்.

ஏக பரபரப்பில் அல்வா பிசினஸ் போவதால் அதன் தயாரிப்பையும் பெரிய லெவவில் கொண்டு போன பிஜிலிசிங்கிற்கு வாரிசில்லை. அவர் மனைவி சுலோச்சனாவின் சகோதரியின் மகன்களான ராஜேந்திரன் டீக்காராம் இருவரும் அந்தக் கடையில் 40 வருடமாகவே வேலை பார்த்து வந்தவர்கள். இந்நிலையில் ஹரிசிங் என்பவர் பிஜிலிசிங்கிடம் வேலைக்காக வந்து கடை மற்றும் அல்வாத் தயாரிப்புகளை பொறுப்பாகக் கவனித்து வந்திருக்கிறார். அவருக்கு மனைவி சுலோச்சனாவின் சித்தி மகளை மணமுடித்து வைத்திருக்கிறார் பிஜிலி சிங்.
பிஜிலிசிங்கின் மறைவிற்குப் பின்பு கிட்டத்தட்ட இருட்டுக் கடையின் உரிமையாளர் என்ற பிம்பமாகவே மாறியிருக்கிறார் ஹரிசிங். இவர் பொறுப்பிற்கு வந்த பிறகு விசுவாசமாக வேலை பார்த்த ராஜேந்திரனும், டீக்காராமும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். ஹரிசிங்கிற்கு இரண்டு மகள்கள் அதில் ஒரு மகளை திருமங்கலத்தில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். மூத்த மகளையும் அவளது கணவர் கோபால் சிங்கையும் தன்னுடன் வைத்துக் கொண்ட ஹரிசிங், கோபால் சிங்கிற்கு நெல்லையின் ஒரு பக்கமுள்ள விசாகா ஸ்வீட்ஸ் கடையை ஒப்படைத்திருக்கிறார்.
தன் மகள் அவள் குழந்தைகளுடன் கொடைக்கானல் சென்று விட்டு திரும்பிய ஹரிசிங்கின் வாகனம் வத்தலக்குண்டு அருகே வரும் போது விபத்திற்குள்ளானதில் அவரது மகளும், குழந்தையும் மரணமடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஹரிசிங் இருட்டுக் கடையின் பொறுப்பை உரிமையை தனது பேரனான சுராஜ்சிங்கிடம் ஒப்படைத்திருக்கிறார். (சுராஜ்சிங் கோபால் சிங்கின் மகன்) உரிமை அவர் வசம் போக 2019ன் போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஹரிசிங் நெல்லை மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார். கொரோனாவால் பீதியாகிப் போன இருட்டுக் கடையின் தயாரிப்பு பணியாளர்கள் பலர் விலகிப் போயுள்ளனராம்.
கொரோனா பரவலில் தான் பாதிக்கப்பட்டதாலும், அதனால் தனது கடைக்கு அல்வா வாங்க வருபவர் யோசிப்பார்கள், வியாபாரம் போய்விடுமே என்ற பல்வேறு மனக் கவலைகளால் பாதிக்கப்பட்ட ஹரிசிங் மருத்துவமனையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குப் பின்பும் அவரது பேரன் சுராஜ்சிங் இருட்டுக்கடை வியாபாரத்தைத் தொடர்ந்திருக்கிறார். காலப் போக்கில் வியாபாரமும் முன்பு மாதிரி பிக்அப்பில் போயிருக்கிறது.

நிலைமைகள் இப்படி இருக்க, பிஜிலிசிங்கின் மனைவி சுலோச்சனாவின் உடன் பிறந்த சகோதரனின் மகனான ஜெயராம் சிங் என்பவர் பாசம் காரணமாக தனது அத்தையான வயதான சுலோச்சனாவை அடிக்கடி வந்து கவனித்துக் கொள்பவராம். பாசம் காரணமாக அவரது உடல் நலனையும் கவனித்து வந்திருக்கிறார். நெல்லையின் ஒரு பக்கம் ஒர்க்ஷாப் நடத்தி வந்த ஜெயராம் தான், இருட்டுக்கடைக்கு முறையான மனைவி வழி உரிமையானவராம். ஜெயராம் சிங்கிற்கு நயன்சிங் என்ற மகனும் கவிதாசிங் என்ற மகளும் உள்ளனர். இவர்களில் நயன்சிங் ஆண்வாரிசு என்பதால் தந்தை ஜெயராம்சிங்கிற்குப் பின்பு இருட்டுக்கடை உரிமை அவர் மகன் நயன்சிங்கிற்கு இயல்பாகவே வந்து விடுகிறது என்றும் சொல்கிறார்கள். (நயன்சிங்கின் சகோதரியான கவிதா தான் தற்போது கமிசனரிடம் புகார் கொடுத்தவர்) இந்தச் சூழலில் அதிரடியாய் உள்ளே வந்த கவிதாசிங், சுராஜ்சிங்கை தன் வசம் கொண்டு வந்தவர் இருட்டுக் கடை உரிமையை அவரிடமிருந்து தன் பெயருக்கு எழுதி வாங்கியிருக்கிறாராம். அதே சமயம் இருட்டுக்கடையில் வேலை பார்த்த சிலர் ஒரங்கட்டப்பட்டும் நீக்கப்பட்டுமுள்ளனராம். அத்துடன் கவிதாசிங்கின் உடன் பிறந்த மூத்த சகோதரனான நயன்சிங்கும் வெளியேற்றப்பட்டிருக்கிறாராம்.

இருட்டுக் கடையின் ஆளுமை நிர்வாகம் பொறுப்பு அனைத்தும் கவிதாசிங்கின் பக்கம் வர, இருட்டுக் கடை வியாபார ஆதாயம் காரணமாகச் சேர்த்த சொத்துக்களை வங்கியில் அடமானம் வைத்து கடனாக 5 கோடி வரை வாங்கியதாகச் சொல்லப்படுகிறது. பொறுப்புகளுக்கு வந்த கவிதா சிங் தனது மகளான கனிஷ்கா சிங்கை, கோவையிலிருக்கிற யுவராஜ் சிங்கின் மகனான பல்வீர்சிங்கிற்கு மணமுடித்துக் கொடுத்திருக்கிறார். இற்குள் மணமக்களுக்கிடையே பிரச்சினை வரதட்சிணை என்ற பெயரில் உருவெடுத்திருக்கிறது. 49 நாட்கள் வாழ்க்கைக்குப் பின்பு கனிஷ்காசிங் தன் தாய் வீடு திரும்பியிருக்கிறார்.

தற்போது விவகாரம் விரியவே கவிதாசிங் வரதட்சிணை புகாரை மாநகர போலீஸ் கமிசனர் அலுவலகத்தில் கொடுத்திருக்கிறார். எனது மகளிடம் அவரது கணவரும் மாமனாரும், உன் வீட்டிற்குச் சென்று இருட்டுக் கடையையும், அதன் டைட்டில் உரிமையையும் பல்ராம்சிங் பெயருக்கு எழுதி வாங்கிவா, இல்ல விவாகரத்துக் கொடுத்து விட்டுப் போ என்று மிரட்டி அனுப்பியுள்ளனர். மண முடிந்த நாள் முதல் மாப்பிள்ளை வீட்டார் பணத்திற்காகவும் வரதட்சிணைக்காகவும் கொலை மிரட்டல் விடுமளவிற்குச் சென்றுள்ளனர்.

“அதிகாரிகளை ஏவி விட்டு அல்வா வியாபாரம் செய்யவிடமாட்டேன், எனக்கு பா.ஜ.க. ஆதரவு இருக்கு. என் பக்கமிருக்கு. என்னை ஒன்றும் செய்ய முடியாது...” என்று மிரட்டுகிறார்கள். “மகளுக்காக வரதட்சணையாக நகைகள் பணம் என்று அள்ளிக் கொடுத்திருக்கிறேன். டிஃபண்டர் காரும் கேட்கிறார்கள். ஏற்பாடு செய்திருக்கிறேன். கணவர் பல்ராம்சிங்கிற்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கனிஷ்கா கண்டித்ததால் தான் இந்தக் கொலை மிரட்டல்கள். என்னுடைய மகளின் வாழ்க்கை எனது வாழ்வாதாரம் இரண்டுக்கும் தமிழக அரசை மட்டுமே நம்பியுள்ளேன்” என்கிறார் கவிதாசிங்.
அரசியல் வழியில் இந்த விவகாரம் இப்படிப் போய்க் கொண்டிருக்க, இருட்டுக்கடை உரிமையைத் தன்னிடமிருந்து போலியாக கவிதாசிங் எழுதி வாங்கியிருப்பதாக சுராஜ்சிங் கோர்ட் படியேறியிருக்கிறாராம். மேலும் விசாரணையை நாம் பல வழிகளில் தீவிரமாக்கிய போது அந்த அதிர்வுத் தகவல் கிடைத்தது.
2015ல் பிஜிலிசிங் இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு தனது மனைவி சுலோச்சனாவின் உடன் பிறந்த ஜெயராம்சிங்கின் மகனான நயன்சிங்கை தனது வாரிசாகவும் அறிவித்து இருட்டுக்கடையின் உரிமை, டைட்டில் டீட் உள்ளிட்டவைகளையும் சில சொத்துக்களையும் நயன்சிங் பெயருக்கு உயிலாக பிஜிலி சிங் எழுதி வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த உயில் உள்ளிட்டவைகளோடு நீதிமன்றம் போக தயாராகி வருகிறாராம் நயன்சிங். கவிதா சிங்கின் உடன் பிறந்த சகோதரரான நயன்சிங், நெல்லை டவுண் வாகையடிப் பகுதியில் அல்வா கடை நடத்திவருகிறார்.
நாம் இதுகுறித்து மேலும் விளக்கமறியும் பொருட்டு கவிதாசிங்கின் அலைபேசி எண்ணில் பல முறை தொடர்பு கொண்டும் தொடர் முயற்சியால் அட்டண்ட் செய்த அவரது மேனேஜர் ஈஸ்வரன், “மேடம் விசாரணையில் இருக்கிறார். பின்னர் நாங்களே தொடர்பு கொள்கிறோம்...” என்றார். அதன்பிறகும் நாம் தொடர்பு கொண்டதில் அவர் ஏற்கவில்லை. அவரது இல்லம் சென்றபோதும் அவர் வெளியூர் சென்றிருப்பதாகத் தெரிவித்தார்கள். அதனால் அவரது விளக்கம் மற்றும் அவரது கோவை மருமகன் பல்வீர் சிங்கின் கருத்தையும் அறிய முடியவில்லை.அவர்கள் பின் விளக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் அதனை வெளியிட தயாராக உள்ளோம்.

இதனிடையே கவிதாசிங்கின் மாப்பிள்ளை பல்வீர் சிங் அவரது தந்தை யுவராஜ் சிங்கும், “நாங்கள் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் இருட்டுக்கடையை வரதட்சிணையாகக் கேட்கவில்லை. மிரட்டலை. அந்தக் கடை உரிமையை கவிதாசிங் எப்படி வாங்கினார் என்ற சந்தேகமிருக்கு. அதைவாங்க மோசடி நடந்திருக்கு. இதில் ஒருவர் வழக்குத் தொடுத்துள்ளார். மருமகளுக்கு அடிக்கடி இரவில் வெளியிலிருந்து போன்வரும். இதனால் இருவருக்கும் சண்டைவரும். கிளாசுக்கு, பார்லருக்கு சென்று வருகிறேன் என்று 5 மணி நேரம் கழித்து வருவார். இதைக் கேட்கக் கூடாதா? கேட்டால் இதனை திருப்புகிறார்கள். நாங்கள் வரதட்சிணை கேட்டு மிரட்ட வேண்டிய அவசியமில்லை” என்று சொன்னதாக தகவல்கள் கிடைக்கின்றன.
இருட்டுக் கடையைத் தோண்டத் தோண்ட முரட்டு மர்மங்கள் கிடைக்கின்றது.