தமிழகத்தில் 7 நாட்களாக நடந்து வந்த கேன் குடிநீர் ஆலைகளின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
சட்டவிரோத குடிநீர் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அனுமதி பெறாத குடிநீர் ஆலைகள் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்டன. இதனைக் கண்டித்து கேன் குடிநீர் ஆலைகளின் உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குடிநீர் ஆலை தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குடிநீர் ஆலைகள் தரப்பு வாதம், அரசு அளித்த அறிக்கை மற்றும் வாதங்களின் அடிப்படையில் நீதிபதிகள் இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர்.
![water plant owners chennai high court judgement](http://image.nakkheeran.in/cdn/farfuture/t5ZCKOXDDSpL-QTaHgAgsl-l8ax2h0g6rc7G-WkIWPw/1583318675/sites/default/files/inline-images/water%20can3.jpg)
அதில் "சீல் வைக்கப்பட்ட குடிநீர் ஆலைகள் புதிதாக விண்ணப்பிக்கவும், அதனை அரசு பரிசீலிக்க வேண்டும். சீல் வைக்கப்பட்ட அனுமதியற்ற குடிநீர் ஆலைகள் அனுமதி கோரி புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் மீது 15 நாட்களில் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும். உரிமம் கோரி விண்ணப்பிக்கும் ஆலைகள் ரூபாய் 50,000 வைப்பு செலுத்த வேண்டும். தமிழக அரசு சென்னை மேலும் தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரின் அளவை கணக்கிட்டு மார்ச் 30- ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும், சட்டவிரோதமாக ஆலைகள் செயல்படுகிறதா என கண்காணிக்க மாவட்ட வாரியாக இரண்டு வழக்கறிஞர்கள் அடங்கிய குழு அமைக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேன் குடிநீர் ஆலைகளின் சங்கத் தலைவர் முரளி, "அனுமதி பெறாத ஆலைகள் விண்ணப்பித்தால் உரிமம் தர 15 நாளில் பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததால் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தார். மேலும் சீல் வைக்கப்பட்ட கேன் குடிநீர் ஆலைகள் அனுமதிக்கோரி விரைவில் விண்ணப்பிக்க உள்ளன.