காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம்கொடுத்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதுகுறித்து ஆலோசிக்க தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளை அழைத்திருந்தார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
இந்த நிலையில் அதிமுக எம்பிக்கள் குமார், அருண்மொழிதேவன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வந்தனர். அவர்களிடம் சிறிது நேரம் பேசினார். அப்போது, நவநீதகிருஷ்ணன் ஏன் மாநிலங்களவையில் தற்கொலை செய்வோம், அது இதுன்னு பேசினார். உணர்வுகளை வெளிப்படுத்தலாம். அதற்காக இப்படியா பேசுவது. வருத்தமாக இருக்கிறது. என்ன பேசப்போகிறோம் என்பதை தம்பிதுரையிடம் ஆலோசிக்கிறாரா இல்லையா என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், எங்களுக்கும் அதுதான் அதிர்ச்சியாக உள்ளது. மற்றவர்களை கலந்தாலோசிக்காமல் இப்படி திடீரென்று பேசிவிட்டார். அதுகுறித்து அறியத்தான் உங்களை சந்திக்க வந்தோம் என்று கூறியுள்ளனர். வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசின் நிலை என்ன, மாநில அரசு என்ன செய்யலாம் என்று மற்ற அமைச்சர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கிறோம். அதுவரை பொறுமையாக இருங்கள் என்று கூறி அனுப்பி வைத்தாராம் எடப்பாடி பழனிசாமி.
வெளியே வந்த எம்பிக்களோ, வாரியம் அமைப்பது தொடர்பான விசயத்தில் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய போவதாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர்.