மீன்பிடி தடைக்காலம் துவங்கிவிட்டது, ஆனால் கஜாபுயலால் மீன் பிடித்தொழில் நலிவடைந்ததால் வருவாய் இழந்து வட்டிக்கு கடன் வாங்கி படகுகளை பழுது, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் மீனவர்கள். புதுச்சேரி அரசைப்போல் படகுகளை பழுது நீக்கம் செய்ய தமிழக அரசும் வங்கி கடன் மற்றும் மானிய தொகை வழங்க வேண்டும் என நாகை மாவட்ட மீனவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து நாகை மீனவர்கள் கூறுகையில், "கிழக்கு கடற்கரையில் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல் ஜீன் 13 நள்ளிரவு வரையிலான 61 நாட்களை மீன் பிடித்தடைக்காலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசும் இதற்காக 1983 ம் ஆண்டு கிழக்கு கடற்கரையில் தமிழ் நாடு கடல் மீன் பிடி ஒழுங்கு முறை சட்டம் கொண்டு வரப்பட்டு சென்னை திருவள்ளுவர் மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தி வருகிறது.
இந்த மீன் பிடிதடைக் காலங்களில் பெரிய இன்ஜின்கள் பொறுத்திய படகுகளையும், மற்றும் இழுவை வலைகளை பயன்படுத்தி மீன் பிடித் தொழில் செய்யும் விசைப்படகளையும், மீனவர்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் செய்யும் பணிகளில் ஈடுபடுவார்கள். ஆனால் கஜா புயல் தாக்குதலால் மீன்பிடித் தொழிலுக்கு மிகவும் தாமதமாக சென்றோம், அதோடு மீன்பிடி தொழிலும் மந்தமாகிவிட்டது.

தொடரந்து இயற்கைப் பேரிடர்களில் சிக்கி மீனவர்களின் வருவாய் முற்றிலும் குறைந்தால் பலலட்ச ரூபாய் செலவு செய்ய முடியாமல் தங்களது படகுகளை சரிசெய்யமுடியாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருக்கிறோம்.
இன்ஜின் பழுது நீக்கம், படகுகளை சீரமைத்தல், வலைகள் மற்றும் மீன்பிடி சாதனைங்களை பழுது நீக்கம் செய்தல், படகுகளில் கடைசல் மற்றும் தச்சு வேலைபாடுகள், கீரிஸ் பூசூதல், வர்ணம் அடித்தல் போன்ற பணிகளை செய்வதற்கு ஒரு படகிற்கு 3 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை செலவு ஏற்படுகிறது. ஆனால், மீன்பிடி தொழிலில் ஏற்பட்டுள்ள நஷ்டம் காரணமாக நாகை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் இருக்கின்ற நிலையில் குறைந்த அளவிலான விசைப்படகு உரிமையாளர்கள் மட்டுமே தங்களது படகுகளை பழுது நீக்கம் செய்யும் பணிகளை தொடங்கி இருக்கின்றனர். அவர்களும் நகைகளை அடமானம் வைத்தும், கந்துவட்டிக்கு கடன் வாங்கியும் வேலைகளை தொடங்கியுள்ளோம்.
ஒரு விசைப்படகில் பழுது நீக்கம் செய்ய 10 நாட்கள் ஆகும் நிலையில், பொருளாதாரரீதியாக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும்பான்மையானவர்கள் இதுவரை பணிகளை தொடங்காமலேயே இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மீன் பிடித் தொழில் வருவாய் போதிய அளவு இல்லாத காரணத்தினால் கடன் வாங்கி பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் புதுச்சேரி அரசு மீனவர்களுக்கு மானியம் வழங்குவது போன்று தமிழக அரசும் வங்கி கடன் மற்றும் மானிய தொகை வழங்க வேண்டும்.
வருடா வருடம் படகுகளை பழுது நீக்கம் செய்ய அரசிடம் கோரிக்கைகள் வைத்தும், முறையிட்டும் இதுவரை எந்த அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை என்பது வேதனை. இலங்கை கடற்படையினரால் தாக்குதல், கஜா புயல் போன்ற பல்வேறு இடர்பாடுகளில் சிக்கித்தவிக்கிறோம்." என்கிறார்கள்.