Skip to main content

குழந்தை கடத்தும் கும்பல் எனக்கருதி வட இந்திய பெண் மீது தாக்குதல்!; சேலத்தில் அரங்கேறிய காட்டுமிராண்டித்தனம்

Published on 03/06/2018 | Edited on 03/06/2018

 

wo


குழந்தைகளைக் கடத்தும் கும்பல் ஒன்று வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்குள் ஊடுருவி இருப்பதாக கடந்த மாதம் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது.

 

இதை உண்மை என்று கருதியவர்கள் சில இடங்களில் சந்தேகப்படும் நபர்கள் மீது சரமாரியாக தாக்கியதில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்திருந்த பெண் ஒருவரும் தாக்கப்பட்டு இறந்தனர்.

இந்நிலையில், அதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவம் சேலத்திலும் இன்று (ஜூன் 3, 2018) நடந்துள்ளது.

 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூரில் இன்று மதியம் 2 மணியளவில் வட இந்தியப் பெண் ஒருவர் அழுக்கடைந்த டி&ஷர்ட்டும், அரைக்கால் டிரவுசர் ஒன்றும் அணிந்தபடி ஊருக்குள் சுற்றி வந்துள்ளார். ஒரு சில தெருக்களில் அடிக்கடி சுற்றி வந்துள்ளார்.

இதைப்பார்த்த சிலர், அந்தப்பெண் குழந்தைகளைக் கடத்த வந்த கும்பலைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனக்கருதி, அக்கம்பக்கத்தில் இருப்போருக்கு தகவல் அளித்தனர். சில நிமிடங்களில் அங்கு கூடிய முப்பதுக்கும் மேற்பட்டோர், அந்தப் பெண்ணை கைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

 

சுமார் 25 வயதுள்ள அந்தப் பெண்ணுக்கு தமிழ் தெரியாததால், அவர் யார்? எதற்காக அந்தப்பகுதியில் சுற்றித்திருந்தார்? என்பதை அறிய முடியவில்லை. அவர் ஹிந்தியில் கூச்சல் போட்டாலும் பொதுமக்கள் அவரை தாக்குவதிலேயே குறியாக இருந்தார்களே தவிர, அவர் சொல்வதை யாருமே கேட்கவில்லை.

 

இதுகுறித்து தகவல் அறிந்த தெடாவூர் கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் சம்பவ இடம் விரைந்து வந்துள்ளார். அவர் அளித்த தகவலின்பேரில் கெங்கவல்லி காவல்துறையினர் அங்கு வந்து, காயம் அடைந்த பெண்ணை மீட்டு, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்த சம்பவம் தொடர்பாக, கெங்கவல்லி காவல்துறையினர், 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்பி,அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து வரும் நிலையில்,சேலம் மாவட்டக் காவல்துறை இது தொடர்பாக ஒரு பத்திரிகை செய்தி
வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

அண்மைக்காலமாக, சந்தேகப்படும் வகையில் நடமாடும் நபர்களைக் கண்டால் அவர்களை கடத்தல்காரர்கள் என நினைத்து தாக்குவது வெவ்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்துவதாகவும், திருட வந்திருப்பதாகவும் வெளியான செய்தியை அடுத்து, பொதுமக்கள் இவ்வாறு ஆவேசமடைந்து சந்தேக நபர்களை தாக்குகின்றனர். இதனால் அவர்கள் பலத்த காயம் அடைந்து உயிர் சேதம் ஏற்படக்கூடிய நிலைக்கு ஆளாகின்றனர்.

 

இத்தகைய செயலினால் அப்பாவி பொதுமக்களும் பாதிக்கின்றனர். தாக்கிய பொதுமக்களும் சட்ட நடவடிக்கைக்கு ஆளாகின்றனர். எனவே, சந்தேகப்படும்படியான நபர்களைக் கண்டால் அவர்களை தாக்கி காயப்படுத்தாமல், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அதன்மீது காவல்துறை விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். இதுபோன்ற தகவல்களுக்கு பின்வரும் செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


சேலம் ஊரக உள்கோட்டம் - 9498100980, சங்ககிரி உள்கோட்டம் - 94981 00971,
ஆத்தூர் உள்கோட்டம் - 94981 00972, மேட்டூர் உள்கோட்டம் - 94981 00973,
ஓமலூர் உள்கோட்டம் - 94981 00974, வாழப்பாடி உள்கோட்டம் - 94981 00975,
சேலம் தனிப்பிரிவு அலுவலகம் - 0427&2272929.

சார்ந்த செய்திகள்