அரசு இயற்றும் சட்டங்களை, நீதிமன்ற உத்தரவு மூலமாக மட்டுமே செயல்படுத்த வேண்டிய நிலை தொடர்வதாக, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தப்படுவதால், விபத்து காலங்களில் 'ஏர் பேக்' (air bag) செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், எதிரில் வரும் வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும் கடுமையான சேதம் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்தது.
மத்திய அரசின் தடையை மீறி, நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்தப்படுவதை எதிர்த்தும், முகப்பு கண்ணாடிகளில், சாலையை மறைக்கும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டுவது, அங்கீகரிக்கப்படாத நம்பர் ப்ளேட்டுகள் வைப்பது, ஆட்டோவிற்குள் கண்ணாடி வைப்பது ஆகியவற்றை தடுக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் லெனின் பால் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. பொது மக்கள் மட்டுமல்லாமல் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் வாகனங்களில் கூட, இது போன்ற தடை செய்யப்பட்ட பம்பர்கள் பொருத்தப்படுவதற்கு, நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், ஆட்டோக்களில் வெளியே பொருத்தப்பட வேண்டிய கண்ணாடிகள், வாகனத்தின் உள்ளே பொருத்தப்படுவது, விதிகளை மீறி வாகனங்களின் முகப்பில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவது மற்றும் விதிகளை மீறும் வகையில் நம்பர் ப்ளேட்டுகள் வைப்பது உள்ளிட்டவை குறித்து, விதிகளை மீறிய வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அரசு இயற்றும் சட்டங்களை, நீதிமன்ற உத்தரவு மூலமாக மட்டுமே செயல்படுத்த வேண்டிய நிலை தொடர்வதாக புகார் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தாமாக முன் வந்து, தலைமைச் செயலாளரை எதிர் மனுதாரராகச் சேர்த்து ஜனவரி 28- ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.