திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியத்தில் இருக்கும் அய்யங்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தர்ராஜின் முறைகேடுகளைக் கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது குறைகூறியும் அய்யன்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவுவாயில் முன்பு கண்ணைக் கட்டிக்கொண்டு தரையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.
ஆத்தூர் ஒன்றியம், அய்யங்கோட்டை ஊராட்சியில் 9 வார்டுகளும், அய்யங்கோட்டை, அ.புதூர், சொர்ணாபுரம் காலனி ஆகிய மூன்று கிராமங்களும் உள்ளன. ஊராட்சி மன்றத் தலைவராக ஆர்.சுந்தர்ராஜ் என்பவரும், துணைத்தலைவராக வசந்தமயிலும் பதவியில் உள்ளனர். வார்டு உறுப்பினர்களாக பி.செல்வமகாமுனி, ஆர்.சரண்யா, ஆர்.இளங்கோவன், எஸ்.சத்யா, சி.முனிராஜா, சுகந்தி, பரந்தாமன், ஆர்.நாகஜோதி ஆகியோர் உள்ளனர். இவர்களில் 8 பேர் ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தர்ராஜின் முறைகேடுகளைக் கண்டித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த மாதம் செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர். அதன்பின்னரும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
வெள்ளிக்கிழமை அன்று ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த அய்யன்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் இளங்கோவன், சரண்யா, நாகஜோதி, செல்வமகாமுனி, பரந்தாமன், முனிராஜா ஆகியோர் கண்ணில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவுவாயிலில் தரையில் அமர்ந்து கொண்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தர்ராஜிக்கு எதிராக கோஷமிட்டதோடு, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ரெங்கராஜன் ஊராட்சி மன்றத் தலைவரின் ஊழலுக்கு துணை போவதாகக் குற்றம் சாட்டினார்கள்.
இதுகுறித்து வார்டு உறுப்பினர் சரண்யா கூறுகையில், “ஊராட்சி மன்றத் தலைவர் வார்டு உறுப்பினர்களை மதிப்பதே கிடையாது. மூன்று வருடங்களாக வரவு செலவு நோட்டுக்களை வார்டு உறுப்பினர்களுக்கு காண்பிப்பது இல்லை. கூட்டம் நடத்தாமலேயே கூட்டம் நடத்தியதாகக் கணக்கு காண்பித்து விடுகிறார்கள். ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவரே காண்ட்ராக்ட் வேலை எடுத்துச் செய்கிறார். அவரது முறைகேடுகள் குறித்து கேட்டால் ‘நான் சும்மாவா செய்கிறேன். ஊராட்சி உதவி இயக்குநருக்கு 3 சதவிகிதம், திட்ட அலுவலருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து தான் காண்ட்ராக்ட் வேலைகளைப் பெற்றுச் செய்கிறேன். நீங்கள் எங்கு போய் புகார் செய்தாலும் அவர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்’ என்று கூறுகிறார்” என்றார்.
அய்யன்கோட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கண்ணைக் கட்டிக்கொண்டு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள் என்று தெரிந்தவுடன் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ரெங்கராஜன் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலையான் அறையில் அய்யன்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் தீவிர விசாரணை செய்தார். சுமார் ஒருமணி நேரம் அறைக்கதவை அடைத்துக் கொண்டு விசாரணை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அய்யன்கோட்டையைச் சேர்ந்த ஊராட்சி உறுப்பினர்கள் கூறுகையில், “இப்போது வந்து ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ரெங்கராஜன் விசாரணை செய்கிறார். ஊராட்சி மன்றத் தலைவர் மீது பலமுறை புகார் செய்தும் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம் எங்கள் ஊராட்சி மன்றத் தலைவர் உதவி இயக்குநருக்கு கமிசன் அதிகமாக கொடுப்பதால் நாங்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை” என்றனர். ஒன்றிய அலுவலக நுழைவுவாயிலில் அய்யன்கோட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கண்ணைக் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தியது செம்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.