நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தமிழக அரசின் சார்பில் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டத்தின் கலெக்டர் செந்தில்ராஜ் பேசுகையில், ''ஒவ்வொரு கிராம சபை கூட்டமும் பாஞ்சாலங்குறிச்சி கிராம சபை கூட்டம் போல் நடக்க வேண்டும் என்று தான் முதல்வர் விரும்புகிறார். அந்த அளவிற்கு ஒரு நல்லபடியாக கிராம சபை கூட்டம் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கூட்டத்திற்கு நான் சற்று தாமதமாக வந்து விட்டேன். அதற்கு எனது மன்னிப்பை உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் மாவட்ட அளவில் சுதந்திர தின கொடியேற்ற விழா இருந்தது. அதனைத் தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், மாவட்ட அளவில் நன்கு வேலை செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகள் இருந்ததால் தாமதம் ஆகிவிட்டது.
இந்த பஞ்சாயத்திற்கு ஒரு பஞ்சாயத்து கட்டிடம் வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. நிச்சயமாக பஞ்சாயத்து கட்டிடம் கட்டித் தரப்படும். இந்த பகுதியில் ரேஷன் கடை வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைத்துள்ளீர்கள் அதுவும் கண்டிப்பாக அமைத்து தரப்படும். நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு முதன் முதலாக பாடுபட்டவர் கட்டபொம்மன். அவர் இருக்கும் இந்த கோட்டையில் ஒளி ஒலி காட்சி ( Light And Sound Show ) ஏற்படுத்தப்பட்டு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் சரியான குடிநீர் உட்பட அனைத்து வசதிகளும் சீர் செய்யப்படும்'' என்றார்.