Skip to main content

போஸ்டர் ஒட்டுவதில் கத்திக்குத்து;  த.வெ.கவில் கோஷ்டி மோதல்

Published on 14/08/2024 | Edited on 14/08/2024
A stab at postering;  Clash of factions in T. V.K


தவெக நிர்வாகிகளுக்கும் இடையே போஸ்டர் ஒட்டுவதில் ஏற்பட்ட தகராறு கத்திக்குத்து, மண்டை உடைப்பு வரை சென்றுள்ளது வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன் (44). இவர், நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றம் தொடங்கி 20 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து தற்போது தமிழக வெற்றிக் கழக குடியாத்தம் ஒன்றிய தலைவராக உள்ளார்.

இவருக்கும் குடியாத்தம் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக் கழக வேலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ள சிஎம்.செல்வம் என்பவருக்கும் இடையே 'GOAT' படத்தின் போஸ்டர் ஒட்டுவதில் ஏற்பட்ட மோதல் கத்திக்குத்து, மண்டை உடைப்பு சம்பவமாக மாறி இருக்கிறது.

கடந்த 10ம் தேதி அன்று, 'GOAT' படத்தின் போஸ்டர்கள் குடியாத்தம் நகரில் ஓடக்கூடிய ஆட்டோக்களில் சில வாலிபர்கள் ஒட்டியுள்ளனர். அதில், குடியாத்தம் ஒன்றிய தலைமை என வேறு ஒருவரின் போன் நம்பர் பதிவிடப்பட்டு இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த கலைச்செல்வம் அந்த வாலிபர்களிடம் சென்று தமிழக வெற்றி கழக குடியாத்தம் ஒன்றிய தலைவராக நான் பதவி வகித்து வருகிறேன். எனக்கே தெரியாமல் குடியாத்தம் ஒன்றிய பதவியில் யார் இருப்பது என கேட்டுள்ளார். அப்போது, அந்த வாலிபர்கள் செயற்குழு உறுப்பினராக உள்ள சி.எம்.செல்வம் தான் ஒட்ட சொன்னார். இது மாவட்டத் தலைவர் உத்தரவு என பதிலளித்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த கலைச்செல்வன், சி.எம்.செல்வத்திடம் சென்று கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சி.எம்.செல்வத்தின் கோஷ்டி ஒன்றியத் தலைவர் கலைச்செல்வன் வீட்டிற்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரண்டு கோஷ்டிக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கத்திக்குத்தாக மாறி கொலை வெறி தாக்குதல் நடந்திருக்கிறது.

இதில் கலைச்செல்வன் வீட்டின் முன்நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் மீதும், வீட்டின் ஜன்னல்களை உடைத்தும் கலைச்செல்வனின் மகன் தலையில் வெட்டிவிட்டு சென்றுள்ளனர் சி.எம்.செல்வம் தரப்பு. இதில், ஆத்திரமடைந்த கலைச்செல்வன் தர்ப்பு பதில் தாக்குதல் நடத்தியதில் விஜய் என்ற வாலிபருக்கு கத்திவெட்டு விழுந்துள்ளது. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் போலீசார் ஒன்றிய தலைவர் கலைச்செல்வனின் குடும்பத்தை கூண்டோடு தூக்கி சிறையில் அடைத்தது. ஆனால் மற்றொரு தரப்பை கைது செய்யாமல் விட்டுவிட்டது.

இந்நிலையில் இந்த கோஷ்டி மோதல் சம்பவத்திற்கு பின்னணியில், முழுக்க முழுக்க வேலூர் மாவட்டத் தலைவர் வேல்முருகன் இருப்பதாக சொல்லப்படுகிறது. வேல்முருகனுக்கும், கலைச் செல்வனுக்கும் இடையே கருத்து வேறுபாட்டின் காரணமாக கலைச் செல்வத்திற்கு எதிராக செயல்பட சி.எம்.செல்வத்தை உருவாக்கிய மாவட்டத் தலைவர் வேல்முருகன், கலைச் செல்வனுக்கு எதிராக செயல்பட வைத்துள்ளார். இதானால், ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்து செயல்பட்டு வந்துள்ளனர்.

இது சம்பந்தமாக புஸ்ஸி ஆனந்த் வரை இரு தரப்பும் மாறி மாறி புகார் அளித்த நிலையில், நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில் இப்போது கத்திகுத்து வரை சென்றுள்ளது.

இதன் பின்புலத்தில் முழுக்க முழுக்க மாவட்டத் தலைவர் வேல்முருகன் இருக்கிறார் என்றும், இரு தரப்பு மோதலில் எங்கள் தரப்பை மட்டும் ரிமாண்ட் செய்து இருக்கிறது குடியாத்தம் போலீஸ். மற்றொரு தரப்பை கைது செய்யாமல் விட்டுவிட்டது அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்து இருக்கிறார் கலைச்செல்வன் மனைவி உஷா ராணி. இதற்கெல்லாம் மிக்க காரணம் மாவட்டத் தலைவர் வேல்முருகன் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் உஷா ராணி.

தமிழக வெற்றிக் கழகத்தில் இப்போதே கோஷ்டி மோதல் வெடித்து வருகிறது. இதில் விஜய் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

சார்ந்த செய்திகள்