![‘Want old pension scheme’ - Civil Servants Union at the struggle](http://image.nakkheeran.in/cdn/farfuture/bap5aPFgRw_PY-MRLx3PDriSEF8ekC1U5C79FbL3XeU/1652089175/sites/default/files/inline-images/th_2226.jpg)
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்களின் போராட்டக் குழு சார்பாக இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு அந்தச்சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ரமேஷ், பிச்சை பிள்ளை, முருகானந்தம், சூரியநாராயணன் கருப்பையா ஆகிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த போராட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப் படுத்த வேண்டும். ஓய்வு ஊதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். 2003க்கு முன்னர் பணியில் சேர்ந்து பின்னர் பதவி உயர்வு நிரந்தர காலமுறை ஊதியம் பெற்றவர்களுக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் நியாய விலைக்கடை பணியாளர்கள், அங்கன்வாடி சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிரந்தரம் ஊதிய விகிதம் நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம், டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், அரசு பணியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பரபரப்பான சூழ்நிலை நிலவியது.