![vv](http://image.nakkheeran.in/cdn/farfuture/qiEQzRcDfYjdJymfSVtpZiREu2dnV9NtGA7zlNnvUAQ/1549276870/sites/default/files/inline-images/vadivelu_2.jpg)
திரைப்படங்களில் நம்மைச் சிரிக்க வைப்பதற்காகப் பல திருட்டுச் சம்பவங்களை சித்தரித்து காட்சி படுத்திருப்பார்கள் அதனைப் பார்த்து நாமூம் மகிழ்ந்திருப்போம். ஆனால், அவை எல்லாம் நிஜ வாழ்க்கையில் நமக்குக் கொடுக்கும் எச்சரிக்கை என்பதை அந்தச் சிரிப்பிலே மறந்து விடுகிறோம். அந்த வகையில்தான் இந்தத் திருட்டுச் சம்பவம் நமக்கு ஒரு எச்சரிக்கை பாடத்தைத் தருகிறது.
தென்னூர் பட்டாபிராமன் தெருவை சேர்ந்தவர் பார்கவி. வயது 26 என்பதால் தன்னை அழகு படுத்திக்கொள்வதில் எப்போதும் முனைப்பாக இருப்பார். அதற்கான அழகு பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுபவர். ஒரு நாள் தீடீரென ஒரு இளம் பெண் வீட்டிற்கே வந்து, ‘நான் பியூட்டி பார்லர் வைத்திருக்கிறேன். உங்களுக்குத் தேவையான பொருட்களை நானே குறைந்த விலையில் வாங்கித் தருகிறேன்’ என்று ஆசை வார்த்தை சொல்லி பார்கவியின் மனசை மாற்றியிருக்கிறார்.
அழகு பொருட்கள் மேல் எப்போதும் அலாதி பிரியம் உள்ள பார்கவி அந்தப் பெண் பேசிய விஷயத்தில் மயங்கி அடிக்கடி அழகு பொருட்ளை வீட்டிற்கே வரவழைத்து வாங்கியிருக்கிறார்.
இது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்த சில நாட்களில் அந்தப் பெண், ‘வீட்டிலே உங்களுக்குப் பேசியல் செய்து கொடுக்கிறேன். உங்களுக்கு நேரம் இருந்தா சொல்லுங்க, நீங்க கடைக்கு வரணும் என்றும் கூட அவசியம் இல்லை’ என்று கொக்கி போட, இதில் மயங்கிய பார்கவி ‘சரி, நா நேரம் கிடைக்கும்போது சொல்றேன்’ என்று சொல்லிவிட்டு ஒரு நாள் குறித்து வீட்டிற்கு வர சொல்லியிருக்கிறார்.
![bb](http://image.nakkheeran.in/cdn/farfuture/jey6esB4WDsbFKJMB7v16WTCzdfpobpXCmKcr4QRo38/1549276814/sites/default/files/inline-images/beauty_0.jpg)
வீட்டிற்கு வந்த அந்தப் பெண் பார்கவியின் முகத்தில் அழகு சாதன பொருட்களை எல்லாம் தடவி பூசி வைத்துவிட்டு 1 மணிநேரம் கண்ணை மூடியிருக்கச் சொல்லியிருக்கிறார். தன் முகத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழ போகிறது என்கிற ஆர்வத்தில் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டிருந்த பார்கவி 1 மணி நேரம் கழித்துக் கண்ணைத் திறந்து பார்த்த போது பேரதிர்ச்சியடைந்தார்.
காரணம் வீட்டில் பீரோ திறந்து கிடந்தது, அதில் வைத்திருந்த 41 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்ததை அறிந்த போதுதான் வசமாக ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்திருக்கிறார்.
அதன் பிறகு அலறி அடித்துக்கொண்டு தில்லைநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். வழக்கை பதிவு செய்த போலீஸ் விசாரணை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.