திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது என்று பேசப்படும் நிலையில், டெல்லியில் இதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் ப.சிதம்பரம் என்று கொளுத்திப் போடுகிறார்கள் கதர்ச்சட்டையினர்.

காங்கிரஸ் மேலிடத்திடம் ப.சிதம்பரம் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், 17-வது மக்களவைத் தேர்தலில் போட்டியிடக்கூடிய காங்கிரஸ் வேட்பாளர்கள், தனிப்பட்ட முறையிலும் மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான். ப.சிதம்பரம் இப்படிச் சொல்வதன் பின்னணியில், அவருக்குச் சாதகமான சில விஷயங்கள் இருக்கின்றன. அவை என்னவென்றால், கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தது காங்கிரஸ். அப்போது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களாக சிவகங்கையில் கார்த்தி சிதம்பரமும், விருதுநகரில் மாணிக்கம் தாகூரும் போட்டியிட்டனர்.
சிவகங்கையில் பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜாவைவிட வாக்குகள் குறைவாகப் பெற்று நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தாலும், கார்த்தி சிதம்பரத்தால் 1,04,678 வாக்குகளைப் பெற முடிந்தது. விருதுநகரில் மாணிக்கம் தாகூர் பெற்ற வாக்குகளோ 38,482 ஆகும். அதனால்தான், பாராளுமன்ற தொகுதியில் குறைந்தபட்சம் 1 லட்சம் வாக்குகளைப் பெற்று தங்களின் செல்வாக்கை நிரூபித்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்தத் தடவை வாய்ப்பளிக்க வேண்டும் என்று லாபி செய்கிறார் ப.சிதம்பரம்.

சிவகங்கையில் ப.சிதம்பரத்துக்கு எதிர் அரசியல் பண்ணுபவர் முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன். இவருடைய மகன் ஜெயசிம்மன், சோனியா காந்தியின் உதவியாளர் ஜார்ஜின் உறவுக்காரப் பெண்ணைக் காதலித்து மணந்தவர். அதனால், சோனியாவிடம் சுதர்சன நாச்சியப்பனுக்கு செல்வாக்கு உண்டு. இவருடைய அண்ணன் பகீரத நாச்சியப்பனின் மகன்தான் மாணிக்கம் தாகூர், ராகுலின் நட்பு வட்டத்தில் இருப்பதாலேயே, இவருக்கு விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் தொடர்ந்து சீட் தரப்படுகிறது. 2009-ல் வைகோவை வென்று எம்.பியும் ஆகியிருக்கிறார் மாணிக்கம் தாகூர். எந்தச் சூழ்நிலையிலும், சுதர்சன நாச்சியப்பனின் கை ஓங்கிவிடக் கூடாது என்பதற்காகவே, மாணிக்கம் தாகூருக்கு விருதுநகரில் சீட் தந்துவிடக் கூடாது என்று காய் நகர்த்துகிறார் ப.சிதம்பரம். ஆனாலும், ராகுலின் ஆசி பெற்றவர் மாணிக்கம் தாகூர் என்பதால், ப.சிதம்பரத்தின் பாட்சா பலிக்காது என்கிறார்கள் அக்கட்சியினர்.

2009 பாராளுமன்ற தேர்தலில் தனித்தே நின்றது தேமுதிக. அப்போது, விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளராகப் போட்டியிட்டு 1,25,229 வாக்குகளைப் பெற்றார் மாஃபா பாண்டியராஜன். நாயக்கர் சமுதாய வாக்குகள் கணிசமாக உள்ள இத்தொகுதி தங்களுக்குச் சாதகமானது என்று நினைக்கும் தேமுதிக தலைமை, விருதுநகரை அதிமுகவிடம் கேட்டுப் பெற்று, பிரேமலதாவைக் களமிறக்கும் திட்டத்தில் இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரும் இத்தொகுதி மீது கண் பதித்திருக்கிறார்.

ரவீந்திரநாத் குமார், விருதுநகர் தொகுதியின் எம்.பி. ஆகிவிட்டால், விருதுநகர் அதிமுக மா.செ.வும் மந்திரியுமான கே.டி.ராஜேந்திரபாலாஜி அரசியலில் தனி ஆவர்த்தனம் செய்துவருவதை நிறுத்திவிடலாம் என்பது, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் கணக்காக உள்ளது. ஆனாலும், மேடைக்கு மேடை முதல்வர் புகழ் பாடிவரும் தனக்கு எந்தவிதத்திலும் இடையூறு வராமல் எடப்பாடி பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இருக்கிறது. அதனால், தேமுதிகவுக்கு இத்தொகுதியை விட்டுக்கொடுப்பதுதான் தனக்குப் பாதுகாப்பானது என்று நினைக்கிறாராம் கே.டி.ராஜேந்திரபாலாஜி. இதன்மூலம், விருதுநகர் தொகுதியின் தேமுதிக வேட்பாளராக பிரேமலதா அறிவிக்கப்படலாம் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது.