விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ளது ஆகூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் யமராஜன். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 30) கூலி வேலை செய்துவருகிறார். நேற்று முன்தினம் (20/05/2022) இரவு தந்தை, மகன் இருவர் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர் அவர்களது குடும்பத்தினர் அனைவரும், உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்ற நிலையில், அன்று இரவு வீட்டிற்கு அருகில் உள்ள கொட்டகையில் கோபாலகிருஷ்ணன் தனியாக உறங்கி கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு திடீரென வந்த மர்ம கும்பல் ஒன்று கொட்டகையில் உறங்கிக் கொண்டிருந்த கோபாலகிருஷ்ணனை தூக்கிச்சென்று, அவரை அரிவாளால் முகம் தலை உட்பட உடலில் பல பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. இதில், நிலைதடுமாறிய கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்து விழுந்துள்ளார். அவர் உடல் முழுவதும் சேறும், சகதியும் ரத்தமும் ஆக வழிந்துள்ளது.
இதை பார்த்து பதறிப்போன அவரது தந்தை எமராஜன், மகனின் நிலையைக் கண்டு அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர், அவர்கள் கோபாலகிருஷ்ணனை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது குறித்து ரோசனை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர் அப்பகுதியினர்.
அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அப்பகுதி பொதுமக்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதி மக்கள் சென்னை பகுதியைச் சேர்ந்த மர்ம நபர்கள் ஆட்டோவில் இரண்டு பேரும் இருசக்கர வாகனத்தில் 3 பேரும் இப்பகுதிக்கு வந்ததாகக் கூறியுள்ளனர். கோபாலகிருஷ்ணனின் சகோதரர் சசிகுமார் என்பவரை முன்விரோதம் காரணமாக வெட்டுவதற்காக, அந்த கும்பல் வந்திருக்கலாம் எனவும், அவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணனை ஆள் மாறி வெட்டி விட்டு தப்பி இருக்கலாம் எனவும், காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
அவர்கள் ஆட்டோவில் வந்து சென்றதை காவல்துறையினருக்கு பொதுமக்கள் தெரிவித்ததின் பேரில் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது வெள்ளிமேடு பேட்டை போலீசார் சந்தேகத்திற்கிடமான ஒரு இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கல்யாணபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் ரஞ்சித்குமார் என்பவரின் மகன் பிரேம்குமார் (வயது 23) என்பது தெரிய வந்துள்ளது.
கோபாலகிருஷ்ணனை வெட்டிய வழக்கில் இவரை வெள்ளிமேடு பேட்டை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அவரிடமிருந்த ஆட்டோவையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கோபாலகிருஷ்ணனை வெட்டிவிட்டு தப்பி ஓடிய கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.