Skip to main content

பாமக பிரமுகரை கொலை செய்த கொலையாளி கைது...

Published on 01/02/2021 | Edited on 01/02/2021

 

villupuram district muthopu village pmk member passes away one arrest
                                                                ஆ.ரவி

 

விழுப்புரம் நகரை ஒட்டி உள்ளது முத்தோப்பு பகுதி. இந்தப் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் ரவி (வயது 50). இவர் கொத்தனார் பணி செய்து வந்தார். மேலும் பாமக கட்சியின் நகர துணைச் செயலாளராகவும் இருந்தார்.

 

இவருக்கு அமுதா என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் (30.01.2021) மதியம் 12 மணியளவில் ரவி அகரம் பாட்டை சாலை பகுதியில் ரயில்வே அருகே மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று, அப்பகுதியில் விட்டுவிட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு மர்ம நபர் திடீரென ரவியை வழிமறித்து கத்தியால் கழுத்து, மார்பு பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டார்.

 

ரத்தவெள்ளத்தில் கிடந்த ரவியை போலீசார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ரவி கொலை செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரவி கொலை சம்பந்தமாக வழக்குப் பதிவுசெய்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதன்மூலம் தலையில் தொப்பி அணிந்த மர்ம நபர் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக தெரியவந்தது.

 

இதையடுத்து விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், டிஎஸ்பி நல்லசிவம் ஆகியோர் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர். அதையடுத்து கொலையாளியைப் பிடிக்க அதிகாரிகள் தனிப்படை அமைத்து உத்தரவிட்டனர். அந்த தனிப்படை போலீசார் கொலையாளியை தேடி வந்தனர். இந்நிலையில் சொத்து தகராறு காரணமாக சகோதரர்களுக்கு இடையே பிரச்சினை இருந்தது தெரியவந்துள்ளது. அதன் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

 

villupuram district muthopu village pmk member passes away one arrest

 

சந்தேகத்தின் பேரில் ரவியின் அண்ணன் கமலக்கண்ணன் மகன் ஜெய்கணேஷ் என்பவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல்களை ஜெய்கணேஷ் கூறியுள்ளார். அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகிலுள்ள நடுவீரப்பட்டு பகுதியைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் ரவி, கமலக்கண்ணன் இருவரும் சகோதரர்கள். கமலக்கண்ணனின் மகன் ஜெய்கணேஷ் (33). எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் இவர், கமலக்கண்ணன் மற்றும் இறந்துபோன ரவி இருவருக்கும் இடையே கடந்த 2006ஆம் ஆண்டு சொத்து பிரச்சினை ஏற்பட்டு, அப்போது நடந்த தகராறில் கமலக்கண்ணன் மற்றும் ஜெய்கணேஷ் இருவரும் ரவியை தாக்கியுள்ளனர்.

 

இதுதொடர்பாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் சம்பந்தமாக இரு தரப்பினரும் சமாதானப் பேச்சுவார்த்தையின் மூலம் அந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் அடுத்துள்ள மயிலம் முருகன் கோவிலில் நடந்த உறவினர் திருமணத்தின்போது ஜெய்கணேஷ் மற்றும் ரவி இருவரும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது முன் பகையை மனதில் வைத்துக்கொண்டு ரவி, ஜெய்கணேஷ் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட திருமணத்திற்கு வருகை தந்திருந்த உறவினர்கள் இருவரையும் தடுத்து சமாதனம் செய்து ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

தன்னை, உறவினர்கள் பலர் முன்னிலையில் ரவி தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியதாகவும் ஜெய்கணேஷ் கூறியுள்ளார். மேலும் இதேபோன்று ரவி, தம்மை அடிக்கடி பலர் முன்னிலையில் அவமானப்படுத்தி வருவதாகவும் அதற்குப் பழி வாங்குவதற்காக தகுந்த நேரத்திற்கு காத்திருந்ததாகவும், ரவியின் நடமாட்டத்தை அவ்வப்போது கண்காணித்து வந்ததாகவும், அதன்படி நேற்று முன்தினம் மாடுகளை மேய்ச்சலுக்கு தனியாக சென்று விட்டுவிட்டு வரும்போது வழியில் ரவியை மடக்கி கத்தியால் சரமாரியாக குத்தியதாகவும் போலீசாரிடம் ஜெய்கணேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

சொத்து தகராறு காரணமாக பாமக பிரமுகர், தனது சகோதரன் மகனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்