ஈரோட்டில் தேசிய நல விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நேற்று இரவு நடைபெற்ற காந்தியக் கொள்கை கருத்தரங்கில் காந்தி மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு பேசினார். தேசிய நல விழிப்புணர்வு இயக்க தலைவர் எஸ்.கே.எம் மயிலானந்தன் தலைமை வகித்தார். தமிழருவி மணியன் தனது பேச்சில்,
"தற்போது நுகர்வு என்பது வெறியாகிறது. இதை,‘சாத்தானின் கலாச்சாரம்’ என்றும், இம்மேற்கத்திய கலாசாரம் வீசினால், தனது ஆன்மாவை இந்தியா இழக்கும் என்றார் காந்தி. காந்தியை, காந்தியத்தை அறிய, அவர் எழுதிய சத்தியசோதனையை முழுமையாக படிக்காவிட்டாலும், முன்னுரையையாவது படியுங்கள். 1924 முதல் 1927 வரை அவரது நவஜீவன் இதழில் காந்தி, குஜராத்தியில் எழுதியதன் மொழி பெயர்ப்பு, சத்யசோதனையாகும்.
இந்நுாலில் அவரது முழு வாழ்க்கை வரலாற்றையும் அவர் எழுதவில்லை என்பதை அறிய வேண்டும். ஒருவன் தன் தாய் மொழியில் கல்வி பயின்றால் மட்டுமே, படைப்பாற்றல், கற்பனை வளம் பெரும் என உணர்ந்ததால், அவர் அத்தொகுப்பை குஜராத்தியில் எழுதி, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். ஆனால், நம் தாய்மொழியில் கற்பதை நாமும், நமது பெற்றோரும் விரும்புவதில்லை. அதிலேயே நாம் காந்தியை கைவிட்டுவிட்டோம்.
ஒவ்வொன்றிலும் நாம் கந்தியையும், காந்தியத்தையும் இழந்து வருகிறோம். இதனால் ஜனநாயகம் அழியும் என்ற கலக்கம் கொஞ்சம் கூட இல்லாமல் போய்விட்டது. அத்துடன், இன்றைய நிலைக்கு காந்தி பொறுத்தமானவரா என வறட்டு தத்துவத்தை கூறுகின்றனர். தரக்குறைவாக விமர்சிக்கின்றனர். அவர்களுக்கு காந்தியை பற்றிய புரிதலை உருவாக்குவோம்.
காந்தியத்தை போதித்த காந்தி, நோபல் பரிசு பெறவில்லை. ஆனால், காந்தியையும், காந்தியத்தையும் கடைபிடித்த மார்ட்டின் லுாதர்கிங், தலாய்லாமா, நெல்சன் மண்டேலா, மியான்மாரில் ஆன் சாங்சுகி என பலரும் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.
காந்தியம் இன்றைக்கு பொறுத்தமானதா என எண்ணுபவர்கள், காந்தியை மறுவாசிப்பு செய்யுங்கள்.
‘பசித்தவனுக்கு உணவு வழங்குங்கள், நோயாளிக்கு மருந்து கொடுங்கள், அறிவற்றவனுக்கு கல்வி கொடுங்கள்’ என்றார் காந்தி. அதைத்தான் நபிகள் நாயகமும், ‘பசித்தனுக்கு உணவு கொடு, நோயாளியை தேடிச்செல், அடிமைகளை விடுதலை செய்’ என்றார். அதைத்தான் ஏசுவும், தனது ‘மலை பேச்சில்’ தெரிவித்துள்ளார்.
அதுபோல, காந்தி 11 விரதங்களை கடைபிடிக்க வலியுறுத்தினார். அவரும் அதை கடைபிடித்தார். அவர் கூறிய, சத்தியம், அகிம்சை, பிரம்மச்சரியம், திருடாமை, உடைமை இன்மை, உடல் உழைப்பு, நாவடக்கம், அஞ்சாமை, தீண்டாமை ஒழிப்பு, சமய நல்லிணக்கம், சுதேசி என்ற, 11 விரதங்களையும் கடைபிடிப்போம்.
காந்திய வாழ்வியலை பின்பற்ற வேண்டும் அது என்றும் தோல்வி அடையாது." என்றார்.