
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இந்நிலையில் புவனகிரியில் புதன் கிழமை பெய்த கனமழையால் மேல்புவனகிரி பகுதியில் புதியதாக ரூ 62 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தண்ணீர் தேங்கி நெல் மூட்டைகள் பாதிப்படைந்து உள்ளது.

இந்த நெல் கொள்முதல் நிலையம் ஆற்றின் ஓரத்தில் கட்டப்பட்டுள்ளது. அதனால் அந்த பகுதியில் மழை நீர் முழுவதும் தேங்கி உள்ளது. மழைநீரை ஊழியர்கள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொள்முதல் நிலையத்தில் 5 ஆயிரம் நெல் மூட்டைகளுக்கு மேல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. போதிய இடம் இல்லாததால் பல விவசாயிகளின் நெல் மூட்டைகளைத் திறந்த வெளியில் அடுக்கி வைத்துள்ளனர். அந்த இடத்தில் மழை நீர் தேங்கியுள்ளதை பார்த்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நெல் கொள்முதல் நிலையம் உள்ள இடத்தை மழை நீர் தேங்காதவாறு மேடான பகுதியாக மாற்ற வேண்டும். தற்போது நனைந்துள்ள நெல் மூட்டைகளை ஈரப்பதத்தை காட்டி கழிக்கக்கூடாது என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.