
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தற்பொழுது செய்தியாளர்களை சந்தித்து கரோனா பாதிப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 447 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பத்து நாட்களுக்குப் பிறகு கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500 க்கும் கீழ் இன்று குறைந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கரோனா பாதிப்பானது 10 ஆயிரத்தை நெருங்க இருக்கிறது. தற்போது தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் ஒரே நாளில் 64 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகினர். இதனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,240 ஆக உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 363 பேர் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,625 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 2.91 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 956 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தமிழகத்தில் கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் 38 அரசு மற்றும் 20 தனியார் கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.
சென்னைக்கு இன்று இரவு ரயிலில் வருவோரை பரிசோதிக்க 400 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 23 நாட்களாக பாதிப்பில்லாமல் இருந்த சிவகங்கை மாவட்டத்தில் புதியதாக ஒருவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு வந்த நபருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
திருவள்ளூரில் 14 பேருக்கு இன்று கரோனா உறுதிசெய்யப்பட்டதால், திருவள்ளூரில் மொத்த பாதிப்பு 506 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நான்கு மாத கர்ப்பிணி உட்பட மேலும் 14 பேருக்கு கரோனா இருப்பது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.