இரவு நேரங்களில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என கொத்தங்குடி கிராமத்தினர், கூத்தாநல்லூர் காவல் நிலையத்திலும் வட்டாட்சியாிடமும் மனு கொடுத்து முறையிட்டனர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை அடுத்துள்ள கொத்தங்குடி, நன்னிமங்கலம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடைபெற்றுவருகிறது. மணல் கொள்ளையர்களின் அதிவேக வாகனங்களின் இரைச்சல் பொதுமக்களை நிம்மதியிழக்க செய்துவிடுகிறது.
அதோடு மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், அதிவேகமாக சாலையோரம் படுத்திருக்கும் ஆடு, மாடுகள் மீது மோதிவிடுகின்றன. சில நாட்களுக்கு முன்பு மணல் கொள்ளையர்கள், சினை பசுவின் மீது வாகனத்தை ஏற்றிக் கொன்றதோடு இல்லாமல் அந்தப் பசுவினை தூர எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தநிலையில் மணல் மாஃபியாக்களுக்கு முடிவு கட்டும் விதமாக, பசுவின் உாிமையாளரும், கொத்தங்குடி கிராம மக்களும் ஒன்றுசேர்ந்து கூத்தாநல்லூர் காவல் நிலையம் மற்றும் வட்டாட்சியாிடம் புகார் மனு கொடுத்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். அந்த மனுவில் "கால்நடைகளை மணல் கொள்ளையர்கள் தொடர்ந்து கொலை செய்து வருகின்றனர். இதேநிலை தொடர்ந்தால் நாளை மனிதர்களுக்கும் இதுதான் ஏற்படும். எனவே, மாடு இறந்ததற்கும் மணல் கொள்ளையை உடனே தடுப்பதற்கும் உாிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.