திருவண்ணாமலை மாவட்டம் என்பது கிராமங்கள் நிறைந்த மாவட்டம். இந்த மாவட்டத்தில் ஜவ்வாதுமலை, கல்வராயன்மலை தொடர்ச்சிகள் உள்ளன. இந்த மலைகளில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இன்றளவும் சாலை வசதியில்லாத மலை கிராமங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது தண்டராம்பட்டு தாலுக்காவில் கல்வராயன்மலை தொடரில் உள்ள மேல்வலசை, கீழ்வலசை, அக்கரப்பட்டி போன்ற கிராமங்களாகும்.
இந்தக் கிராமத்திற்கு சாலை வசதி கிடையாது, மின்சாரம் கிடையாது, குடிநீர் வசதி கிடையாது. தொடக்கப்பள்ளி இருந்தும் ஆசிரியர் வருவதில்லை. இப்படி அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத கிராமங்களாக இவை இருந்தன. இந்தக் கிராம மக்கள் ஏதாவது தேவையென்றால் மலையில் இருந்து கீழே இறக்கிவர வேண்டும். ஆபத்தான வழிகளில் இருந்து மலையில் இருந்து இறங்கி வருவதால் நோயாளிகள் பலர் இறந்துள்ளனர், பிள்ளைகள் படிக்க போகாமல் இருந்தனர்.
இதனையெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பு 'நக்கீரனில்' செய்திக் கட்டுரையாக வெளியிட்டோம். செய்திகளைப் படித்த அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக அந்தக் கிராமங்களுக்கு அதிகாரிகளுடன் சென்று உங்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படும் என நம்பிக்கை தந்துவிட்டு வந்தார். அதன்படி மின்சாரம் வழங்கப்பட்டது. வனத்துறை அனுமதி தராததால் சாலை வசதி செய்யப்படாமலே இருந்தது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவராக வந்த கந்தசாமி, இதற்கான சிறப்பு முயற்சிகளை எடுத்தார். அதன்படி ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் வானாபுரம் வழியாக மேலே உள்ள மலைக் கிராமங்களுக்குச் செல்ல 13.4 கி.மீ தூரத்துக்குத் தார்ச் சாலைகள் அமைக்க 3.50 கோடியும், கீழ்வலசை முதல் ஆத்திப்பாடி உள்செக்கடி வரையிலான 6.5 கி.மீ மண்சாலையை மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 1.78 கோடி மதிப்பீட்டில் செய்ய உத்தரவு வழங்கினர். அதன்படி அந்த வேலைகள் நடைபெற்றுவருகின்றன.
அந்தப் பணிகள் எப்படி நடைபெறுகிறது என ஆய்வு செய்ய அதிகாரிகளுடன் கலெக்டர் கந்தசாமி சென்றார். ஜீப்கள் ஒருக்கட்டத்துக்கு மேல் செல்ல முடியாது என்பதால் காவல் உதவி ஆய்வாளர் ஒருவரின் இருசக்கர வாகனத்திலும், பின்னர் நடந்தும் சென்று ஆய்வு செய்துவிட்டு பணிகளை வேகமாகச் செய்யுங்கள் என உத்தரவிட்டு வந்துள்ளார். இன்னும் இரண்டு மாதத்தில் அந்தப் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு அந்தப் பாதைகள் வந்துவிடும் என்பது குறிப்பிடதக்கது.