கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நீதிமன்ற உத்தரவுப்படி திருவிழா நிகழ்ச்சிகள் நடத்த உரிமை வேண்டும் என்று ஒரு குடியிருப்பு மக்கள் 7 மணி நேரம் கோயில் முன்பு சுடும் வெயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். கோயில் நிர்வாகிகள், அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராம காவல் தெய்வமாக எழுந்தருளியுள்ள முத்துமாரியம்மன் கோயில் அப்பகுதியிலேயே மிகப்பெரிய பிரமாண்ட ராஜகோபுரத்துடன் அமைந்துள்ள கோயில். இந்த கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் பூ சொறிதல், காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கி 10 நாட்கள் வரை நடத்தப்படும். அதே போல கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை பூ சொறிதல் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. ஞாயிற்றுக் கிழமை இரவு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு திருவிழா நடத்துவதற்காண ஏற்பாடுகள் நடந்து வந்தது.
இரவில் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடக்க இருந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு ஒரு குடியிருப்பு மக்கள் திடீரென கோயில் முன்பு சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் எங்களுக்கு வழக்கமான முறையிலும், நீதிமன்ற உத்தரவுபடியும் திருவிழா நிகழ்ச்சிகள் நடத்த உரிமை வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு எற்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு வந்த முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டியன் அந்த மக்களிடம் சமாதானம் பேசி கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். ஆனால் தர்ணாவில் இருந்த மக்கள் உரிமை கிடைக்கும் வரை கோயிலுக்குள் வரமாட்டோம் என்று மீண்டும் வெளியே வந்து வெயிலில் அமர்ந்துவிட்டனர்.
ஒரு குடியிருப்பு மக்கள் நீண்ட நேரமாக தர்ணாவில் ஈடுபட்டுள்ள தகவல் அறிந்து கோயில் நிர்வாகி செய்கோடன் உள்ளிட்ட கரை நிர்வாகிகள். கிராமத்தினர், வருவாய் துறை அதிகாரிகள் வட்டாட்சியர் பொருப்பு யோகேஸ்வரன், கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரெங்கராஜன், கிராம நிர்வாக அலுவலர் பொருப்பு அருள்வேந்தன், கீரமங்கலம் போலிஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கோயிலுக்கு வந்தனர். தொடர்ந்ர் பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் வழக்கமாக முறைப்படியும் நீதிமன்ற உத்தரவுப்படியும் தர்ணாவில் ஈடுபட்டுள்ள குடியிருப்பு மக்கள் மாலை 6 மணி முதல் இரவு 12 மணிக்குள் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு தர்ணாவில் ஈடுபட்டிருந்த மக்கள் 7 மணி நேர போராட்டத்தை கைவிட்டனர். அதன் பிறகு காப்புக்கட்டுவதற்காண பணிகள் நடத்தப்பட்டது.
ஆனால் இந்த சமாதான பேச்சுவார்த்தைக்கு மேலும் கரை நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.