தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கிய கமல்ஹாசன் மீது முட்டை மற்றும் கற்களை வீசியவர்களை ம.நீ.மய்யத்தினர் அடித்து, உதைத்தனர்.
அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் பேசியது நாடெங்கிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டெல்லி நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கமல்ஹாசனுக்கு எதிராக அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று, கரூர் வேலாயுதம்பாளையத்தில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். பொதுக்கூட்ட மேடையை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. பொதுக்கூட்ட மேடையில் பேசிவிட்டு கமல்ஹாசன் கிழே இறங்கியபோது, அவரை நோக்கி முட்டை மற்றும் கல்கறை 2 பேர் வீசினர். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் நீதி மய்யத்தினர் அந்த இருவரையும் அடித்து,உதைத்தனர். போலீசார் அந்த 2 பேரையும் மீட்டபோது, கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், கல்வீசிய ஒருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். அவர் தளவாபாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பது தெரியவந்துள்ளது.
கல்வீசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி. விக்ரமன் ஆர்ப்பாட்டத்தை கைவிடும்படி மைக்கில் பேசினார். சினேகன் உள்ளிட்ட ம.நீ.ம. நிர்வாகிகள் சிலர், கல்வீசி தாக்கியவரை தப்பிக்கவிட்டதாக விக்ரமனிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனால், கல்வீசிய நபர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், கல்வீசி கடும் தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.