நெல்லை மாவட்டத்தின் கேரள எல்லைப் பகுதியான பிரானூர் பார்டரில் அமைந்துள்ள பார்டர் புரேட்டா கடையில் நடந்த வருமான வரித்துறையினரின் ரெய்ட், சாதாரண புரேட்டா கடையில் ரெய்ட்டிற்கு என்ன இருக்கிறது என்று சாமான்யர்களின் பார்வையில் கடந்து சென்றாலும், உளவு மற்றும் நுண்ணறிவுத்துறையினரின் பார்வையில் இந்த ரெய்ட் மிகப் பெரிய விஷயமாக ஆராயப்படுகிறது.
மொத்தப் பகுதிகளையும் ஒன்லைனில் சொல்ல வேண்டுமானால் விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் முன்னேறிய தற்போதைய சமகாலத்தில் இந்த ரெய்ட், எந்த ஒரு விஷயத்தையும் சாமான்யமாக எடுத்தக் கொள்ளக் கூடாது. உள்ளே இறங்கினால் திமிங்கலம் சிக்கலாம் என்பதையே உணர்த்துகிறது.
பார்டர் புரோட்டா கடை ரெய்ட் பற்றிய பின் புலத்தை விசாரிக்கையில் பல அதிர்ச்சித் தகவல்களை வீசுகிறார்கள், அதிகாரிகள் மற்றும் ஏரியாவின் ஸோர்சுகள்.
செங்கோட்டைய ஒட்டிய பிரானூர் பார்டரிலிருக்கும் ரஹ்மத் புரோட்டா கடை சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலான பழையானது தமிழகத்திலிருந்து கேரளா செல்கிற ஆயிரக்கணக்கான வாகனங்கள் பிரானூரில் நின்று நிதானித்துச் செல்வதால் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட வல்லம் கிராமத்தின் ரஹ்மத் சகோதரர்கள் இந்த புரோட்டா சால்னா கடையை ஆரம்பித்தார்கள் அதோடு உள்ளூர் வியாபாரமும் சற்று கை கொடுக்கத்தான் செய்தது.
கேரளா போய் வரும் பயணிகள், வாகனங்கள். மற்றும் வாகன ஒட்டிகள் என்று ஒட்டு மொத்தத் தரப்புகளும் பகல் இரவு என்று நேரம் காலம் பார்க்காமல் போய் வருவதால் அவர்களின் வயிற்றுப் பசிக்கான ஆபத்பாந்தவனாக வழிப் போக்கில் எந்நேரம் சென்றாலும் பார்டர் புரோட்டா கடையை நம்பிப் போகலாம். உணவுக்குப் பஞ்சமில்லை என்ற நம்பிக்கையை உணர்த்துவதற்காக 24 மணி நேரமும் என்று ரவுண்ட் த கிளாக் என புரோட்டா கடை செயல்பட்டதால் காலப் போக்கில் பார்டர் புரோட்டா கடை என்கிற டைட்டிலை கஸ்டமர்களிடையே ஏற்படுத்தி பிரபலப்படுத்தி விட்டது. அது தவிர, குற்றாலச் சீசன்களில் குளியல் போட வருகிற சுற்றுலாப் பயணிகளின் வாகனக் கூட்டங்கள் ஊர் திரும்புகிற சமயம், இங்கே ஒரு டிரிப் அடிக்காமல் போவதில்லை என்கிற அளவுக்கு வியாபாரம் தறிகெட்டுக் கொடி கட்டிப் பறந்திருக்கிறது. வருடம் முழுக்க சாதாரண தூரல் அல்ல, நல்ல அடைமழை வியாபாரம்.
அறிமுகம் போதும். விசயத்திற்கு வருவோம்..
கடந்த வாரம் ஒரு முக்கியப் பணியின் பொருட்டு கொல்லம் செல்லுவதற்காக இந்த வழியே வந்திருக்கிறார் தென் மாவட்ட வருமான வரித்துறையின் அந்த விஜிலன்ஸ் அதிகாரி. மாலை நேரம் போகிற வழியில் பசியெடுக்க, பிசியான பார்டர் புரோட்டா கடையில் சாப்பிட்டிருக்கிறார். நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பிட்ட பின் பில் பார்த்துப் பணம் கொடுத்தப் பழகிப் போன அந்த அதிகாரி, சப்ளையரிடம் பில் கேட்டிருக்கிறார். அவரோ பஸ் டிக்கெட் அளவிலான துண்டுச் சீட்டில் தொகையைக் குறிப்பிட்டுக் கொடுக்க, கல்லாப் பெட்டி ஒனரிடம் சீட்டுப்படி சாப்பாட்டுப் பணத்தைக் கொடுத்த அதிகாரி சாப்பிட்டதுக்குப் பில் இல்லையா எனக் கேட்டதும், நாங்க என்ன இன்கம்டாக்ஸ் கணக்கா வைச்சிருக்கோம் பில் குடுக்கிறதுக்கு துட்ட வாங்கிக்கிட்டுச் சீட்டத் தூரப் போட்டுறுவோம் என்று சர்வ சாதாரணமாச் சொன்னது. அதிகாரியை வாய் பிளக்க வைத்து விட்டது.
விவகாரம் பண்ணாமல் வெளியேறிய அந்த அதிகாரி, கடையின் எதிரே ஒரு மணி நேரமாய் நின்று புரோட்டாக் கடையை நோட்ட மிட்டிருக்கிறார். அவரது மூளை, ஒரு மணி நேர பிசினசைக், கணக்கிட்டு தோராயமாக நாள், மாத டர்ன் ஒவரை ஓர்க் அவுட் பண்ண, வியாபரத்தன்மையை கூட்டிக் கழித்துப் பார்த்து அசந்து விட்டது.
விளைவு. வருமான வரித்துறையின் அவரது கீழமை அதிகாரிகள் 5 வாகனங்களில் உணவு தயார் செய்து வியாபரம் தொடங்குகிற நேற்று மதியம் மூன்று மணிக்கு ஷார்ப்பாக புரோட்டா கடையினுள்ளே நுழைந்து விட்டார்கள்.
புரோட்டா எண்ணிக்கை, அன்றைக்குத் தயார் பண்ணவிருக்கிற புரோட்டாவிற்கான மைதாமாவு மூடை, சிக்கனின் அளவு, முட்டை, தாக்ஸாவில் தயார் செய்யப்பட்டிருந்த சால்னாவின் கொள்ளளவு மற்றும் வருவல் போன்ற அனைத்து தயாரிப்புகளின் மொத்த அளவைக் கொண்டு சேல்ஸ் தொகையை அளவீடு செய்து விட்டார்கள். கடையில் வைக்கப்பட்டிருந்த கணக்கிற்கும் சிக்கிய சரக்குகளின் மதிப்புற்கும் ஊசி முனை அளவு கூட சம்பந்தமில்லாமல் போகவே அனைத்துக் கணக்குகளின் ஸ்டேட்மெண்ட்களை ஆதாரங்களுடன் எடுத்துக் கொண்டவர்கள். ஒனரின் வீடுகளிலும் சோதனை போட்டிருக்கிறார்கள்.
கடை கணக்குகள் மற்றும் வியாபாரச் சொத்துக்கள் குறித்து விசாரணை நடக்கிறது சட்டத்தை மீறி செயல்பட்டிருந்தால் நடவடிக்கை நிச்சயம் என்கிறார் ஐ.டி ரெய்ட் அதிகாரி.
புளியரையில் கிளையைக் கொண்ட அந்தக் கடையின் நிர்வாகம். அண்மையில் தான் திண்டுக்கல்லில் பார்டர் புரோட்டா கடை என்கிற பிராஞ்சைத் திறந்திருக்கிறது.
வியாபாரத்திற்கு வழிகாட்டியான டைட்டிலே, வருமான வரிச் சிக்கலையும் உண்டு பண்ணியிருக்கிறது.