இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி எனப்படும் எம்.எஸ்.தோனி. உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் தோனி தலைமையிலான இந்திய அணி இரண்டு முறை கோப்பையை வென்றெடுத்த சாதனை நாயகன்.
இக்கட்டான நெருக்கடிச் சூழ்நிலையில் இந்திய அணி களத்திலிருந்த வேளைகளில் ஊசி முனை அளவும் பதட்டமோ, டென்ஷனோ இன்றி இயல்பான சராசரி வீரராக ஒற்றை நபராகப் போராடி அணியை வெற்றிக்கு கொண்டு போய் ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்களைப் புருவம் உயர வைத்த உலக ரசிகர்களைக் கொண்ட கூல் கேப்டன் தோனி என்று சொல்லப்படுபவர். தன் பொருட்டுக் கிளம்பும் விமர்சனங்களுக்கு வார்த்தைக்களால் பதில் கொடுக்காமல் தன் பேட்டால் பதில் கொடுக்கும் தனி வழிக் குணம் கொண்ட இயல்பானவர் தோனி என்றெல்லாம் புகழப்படுபவர்.
நெல்லையில் நேற்று நடந்த டி.20 கிரிக்கெட் விழாவைத் துவக்கி வைப்பதற்காக தோனி நெல்லையில் உள்ள சங்கர் நகர் ஸ்டேடியம் வந்தார். இதனிடையே திடீரென செங்கோட்டை அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் குண்டாறு அணையில் குளிப்பதற்காக நேற்று மாலை அந்தக் பகுதியில் உள்ள தனியார் அருவிப் பகுதிக்கு வந்தார். தோனி வருவது குறித்த தகவலால் அவரது பரம ரசிகர்கள் அந்தப் பகுதியில் அவரைப் பார்ப்பதற்காகத் திரண்டார்கள். அதோடு சுற்றுலாப் பயணிகள் இளைஞர்களின் கூட்டமும் அதிகரித்தது. பின்னர் அங்குள்ள தனியார் விடுதியில் உணவருந்தி விட்டு அருவியில் குளிப்பதற்காக சென்றார் தோனி.
அருவியில் குளித்து மகிழ்ந்த தோனியை ரசிகர்கள் சுற்றிக் கொண்டனர். தன்னுடைய அடையாளமான மௌனப் புன்சிரிப்பையே அவர்களுக்குப் பதிலாகக் கொடுத்து விட்டு மாலையில் கிரிக்கெட் போட்டியைத் தொடங்கி வைப்பதற்காகக் கிளம்பிச் சென்றார் தோனி.