![tamilnadi Village council meetings](http://image.nakkheeran.in/cdn/farfuture/GAgNKlJGJLGrzAc_Sb7fz-RyZSWeytnmNoBvui-GnyE/1601568432/sites/default/files/inline-images/sdgedgegte.jpg)
மே 1 உழைப்பாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
நாளை அக்டோபர் 2 காந்தி பிறந்த தினம் என்பதால் கிராமசபை கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கரோனா தொற்று காரணமாக மதுரை, திருச்சி, திருவாரூர், நெல்லை மாவட்டங்களில் கிராமசபை கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளார். அதேபோல் கடலூர், தஞ்சாவூர், விருதுநகர், நாமக்கல், ராமநாதபுரம், தர்மபுரி, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
மே 1, ஆகஸ்ட் 15 தேதிகளில் நடைபெறவிருந்த கூட்டங்களும் ஏற்கனவே கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது நாளை நடைபெறவிருந்த கிராம சபை கூட்டமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நாளை நடைபெறவிருந்த கிராமசபை கூட்டத்தில், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் வேளாண் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவது போன்ற பல்வேறு முன்னெடுப்புகள் எடுத்துவந்த நிலையில் தற்போது 13 மாவட்டங்களில் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.