இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டிவருகின்றனர்.
இதையடுத்து, ‘ஜெய் பீம்’ படத்தில் வன்னியர் சமூகத்தைத் தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் பாமக, பாஜக கட்சிகள் ‘ஜெய் பீம்’ படத்திற்கு எதிராக குரல் கொடுத்துவருகின்றன. இதனைக் கண்டித்து சூர்யாவுக்கு ஆதரவாகப் பலர் அறிக்கை வெளியிட்டுவருகின்றனர். அந்த வகையில், சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாமக, பாஜக கட்சிகளுக்கு எதிராகப் பதிவிட்டுவருகின்றனர். அதிலும் பாமக கட்சியின் மாவட்டச் செயலாளர் ஒருவர் நடிகர் சூர்யாவை மிதித்தால் ஒரு லட்சம் ரூபாய் பணம் பரிசு என செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படுத்தியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், இன்று (18.11.2021) கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் நினைவுநாளுக்கான நினைவேந்தல் விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ‘ஜெய் பீம்’ சர்ச்சை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த சீமான், ''அதை தவிர்த்திருக்கலாம். இந்தப் பிரச்சனை வெளியானவுடனே அந்த புகைப்படம் நீக்கப்பட்டு லட்சுமி உள்ள காலெண்டரை வைத்துவிட்டனர். இதை தொடக்கத்திலேயே செய்திருக்கலாம் என்பதுதான் எனது கருத்து. ஒரு சமுதாய மக்களின் வலியை வெளிப்படுத்தும்போது மற்ற சமுதாயத்திற்கு வேதனையை ஏற்படுத்திவிடக்கூடாது என்பது என் கருத்து. சூர்யாவை தாக்குவது, தரக்குறைவாகப் பேசுவது அநாகரிகமானது. அந்த மாதிரியெல்லாம் பதிவிடக் கூடாது. எனக்குத் தெரிந்து இதில் சூர்யாவிற்கு சம்பந்தம் இருக்காது. அவர் கதை கேட்டிருப்பார், நடித்திருப்பார். ஆனால் பின்புலத்தில் என்ன இருக்கிறது என்பது கலை இயக்குநர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் இவர்கள்தான் பார்ப்பார்கள். அவருக்குத் தெரிந்து இதைச் செய்திருப்பாரா என்ன...? சூர்யாவை மட்டுமல்ல அவரது குடும்பத்தினரையே எனக்கு நன்று தெரியும். சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வுகாண நினைப்பார்களே தவிர, புதியதாக ஒரு பிரச்சனையை வளர்க்க வேண்டும் என எப்பொழுதுமே நினைக்க மாட்டார்கள். அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என்று இருப்பார்கள். தேவையில்லாமல் அவர்களை மிதியுங்கள் உதையுங்கள் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. சூர்யாவை உதைக்கச் சொன்னவரை வேண்டுமானால் உதைங்க, நான் காசு தருகிறேன்'' என்றார்.
''அந்தக் காலெண்டரை நீக்கியதில் லட்சுமி படம் உள்ள காலெண்டரை வைத்தீர்கள். ஏன் இயேசு உள்ள காலெண்டரை வைக்கலாமே என பாஜகவை சேர்ந்த ஹெச். ராஜா விமர்சித்துள்ளார்'' எனச் செய்தியாளர் கேள்வி எழுப்ப, அதற்குப் பதிலளித்த சீமான்,
“அவர்களுக்கு சாதி, மதம் இரண்டும் இரண்டு கண். மதத்தின் வேர் சாதியில்தான் உள்ளது. அவங்களுக்கு சாதி இருந்தால்தான் அவர்களுக்கு அரசியல். எனவே அவர் அப்படித்தான் பேசுவார். அவருக்கு சாதி வேணும், எங்களுக்கு சாதி வேண்டாம்'' என்றார்.