சேலம் மாவட்டம், வீரகனூர் அருகே உள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவர், இந்திய ஜனநாயக கட்சியின் (ஐஜேகே) கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதியில் ஐஜேகே சார்பில் பெரியசாமி என்பவர் போட்டியிடுகிறார். அவருடன் செல்வக்குமாரும் சேர்ந்து பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு தனிச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (ஏப். 3) வேட்பாளருடன் பரப்புரையை முடித்துக்கொண்ட பிறகு செல்வக்குமார், பரப்புரையில் ஈடுட்ட கட்சிக்காரர்களுக்கு உணவு வாங்குவதற்காக ஆத்தூர் அருகே உள்ள ஒட்டாம்பாறை பகுதிக்குச் சென்றார். அப்போது ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடுதல் நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் வசந்தன் தலைமையில் அதிகாரிகள் அவருடைய காரை தணிக்கை செய்தனர்.
அந்த காரில் இருந்து 3.90 லட்சம் ரூபாய் இருந்தது தெரிய வந்தது. அந்தப் பணம் எங்கிருந்து வந்தது? என்ன நோக்கத்திற்காக கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கான எந்த வித ஆவணங்களும் இல்லை. இதையடுத்து அந்தப் பணத்தை நிலைக்குழு அதிகாரிகள் பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அதிகாரி துரையிடம் ஒப்படைத்தனர்.
மேலும், செல்வக்குமார் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணத்தைக் கொண்டு செல்லலாம் என்பதால் அவரிடம் விசாரிக்கும்படி, ஆத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் உமாசங்கர் வழக்குப்பதிவு செய்து, ஐஜேகே கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வக்குமாரை ஏப். 4ம் தேதி கைது செய்தனர். இச்சம்பவம் ஐஜேகே கட்சித் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.