நாமக்கல் அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கோழிக்கால்நத்தம் ஈஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மகன் தேவா என்கிற தேவராஜன் (32). எலக்ட்ரீஷியன். இவருடைய மனைவி காயத்ரி என்கிற சரண்யா (28). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தேவராஜனிடம் அதே ஊரைச் சேர்ந்த ராஜூ என்பவர் உதவியாளராக வேலை செய்து வந்தார். டிசம்பர் 19 ஆம் தேதி, தேவராஜன் தனது உதவியாளரை அழைத்துக் கொண்டு வழக்கம்போல் வேலைக்குச் சென்றார். வேலை முடிந்து வீடு திரும்ப வேண்டிய தேவராஜன், அன்று இரவு எட்டிமடை - அப்பர்பாளையம் சாலையில் உள்ள ஜெகதாம்பாள் நகர் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு காலிநிலத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு காவல்நிலைய ஆய்வாளர் பாரதிமோகன் மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். மர்மநபர்கள் தேவராஜனை கழுத்தை அறுத்தும் உடலில் சரமாரியாகக் குத்தியும் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்தன. தேவராஜனின் சடலம் உடற்கூராய்வுக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலைச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். தேவராஜன், அவருடைய மனைவி காயத்ரி, உதவியாளர் ராஜு ஆகியோரின் செல்போன்களில் பதிவாகி இருந்த எண்கள், அடிக்கடி யார் யாரிடம் பேசினர் உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தேவராஜனின் மனைவி காயத்ரிதான் இந்தக் கொலைக்கு மூளையாகச் செயல்பட்டிருப்பதும் கூலிப்படையை ஏவி கணவனைத் தீர்த்துக்கட்டியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். சேலம் மாவட்டம் சங்ககிரி நல்லப்பநாயக்கன் தெருவைச் சேர்ந்த விமல்குமார் என்பவருக்கும் காயத்ரிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதற்கு இடையூறாக இருந்ததால்தான் விமல்குமார், அவருடைய கூட்டாளி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மூலம் தேவராஜனை கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, விமல்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். கைதான விமல்குமார் அளித்த வாக்குமூலத்தில், “எனக்கு தொழில்ரீதியாக தேவராஜனுடன் பழக்கம் ஏற்பட்டது. அதனால் அடிக்கடி அவருடைய வீட்டிற்குச் சென்று வந்தேன். அப்போது அவருடைய மனைவி காயத்ரி என்கிற சரண்யாவுடன் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் மிக நெருக்கமாகப் பழகத் தொடங்கினோம். கடந்த ஓராண்டாக நாங்கள் இருவரும் தேவராஜனுக்குத் தெரியாமல் பலமுறை தனிமையில் சந்தித்து நெருங்கிப் பழகி வந்தோம்.
ஒருகட்டத்தில் இந்த விவகாரம் தேவராஜனுக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியைக் கண்டித்தார். மேலும், அவர் குடியிருந்த வீட்டையும் காலி செய்துவிட்டு, லைன் குடியிருப்புக்கு போய்விட்டார். அவர் வீடு மாற்றியதும் எங்களுக்கு ஒருவிதத்தில் வசதியாகத்தான் இருந்தது. நாங்கள் மீண்டும் நெருங்கிப் பழகுவதை அறிந்த தேவராஜன் எங்களைக் கண்டித்து மிரட்டினார். நாளுக்குநாள் அவரின் கண்காணிப்பு அதிகமானதால் நாங்கள் பழையபடி சந்தித்துக்கொள்ள முடியாமல் போனது. இனியும் தேவராஜன் உயிருடன் இருந்தால் எங்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பார் என்று கருதி அவரை தீர்த்துக்கட்டிவிடத் தீர்மானித்தோம்.
எங்கள் திட்டத்தைக் கூறி குமாரபாளையம் வினோபாஜி நகரைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கோபாலகிருஷ்ணனின் (27) உதவியைக் கேட்டேன். கொலை செய்ய 2 லட்சம் ரூபாய் செலவாகும் என்றார். அப்போது எங்களிடம் கையில் அவ்வளவு பணம் இல்லை. தேவராஜன் 10 லட்ச ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்திருந்ததால் அவரை கொன்றுவிட்டால் அந்தப் பணம் கிடைக்கும் என்றும், அதில் இருந்து 2 லட்சம் ரூபாய் தருவதாகவும் சொன்னோம். அவரும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கோபாலகிருஷ்ணன் ஒரு கூலிப்படையை ஏற்பாடு செய்து, தேவராஜன் எங்குச் செல்கிறார்? எப்போது, எந்த வழியாக வீட்டுக்கு வருவார்? உள்ளிட்ட விவரங்களைக் கண்காணித்தார்.
இந்நிலையில், டிசம்பர் 19 ஆம் தேதி எனக்குத் தெரிந்த ஒருவரின் புது வீட்டிற்கு எலக்ட்ரிக்கல் வேலை செய்யவேண்டும் எனக்கூறி தேவராஜனை வரவழைத்தேன். அதை நம்பிய அவர், தனது உதவியாளருடன் நான் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தார். நான் ஏற்பாடு செய்திருந்த கூலிப்படை கும்பல், தேவராஜனை ஆள்நடமாட்டம் இல்லாத பொட்டல் காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்றனர். அந்த இடத்தில் வைத்து தேவராஜனை கழுத்தை அறுத்தும் சரமாரியாகக் குத்தியும் கொலை செய்தனர். அவர் ரத்தவெள்ளத்தில் செத்துவிட்டார் என்பதை உறுதி செய்த பிறகு, நாங்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டோம்.” என்று கூறியுள்ளார்.
இவ்வாறு விமல்குமார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதையே சரண்யாவும் தெரிவித்திருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து கைதான மூவரையும் காவல்துறையினர் திருச்செங்கோடு குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் காயத்ரியை சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும், மற்ற இருவரையும் சேலம் மத்தியச் சிறையிலும் அடைத்தனர். இந்தக் கொலைவழக்கில் தொடர்புடைய கூலிப்படை கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவர்களும் ஓரிரு நாளில் பிடிபடுவார்கள் எனத் தெரிகிறது.