Skip to main content

“ராகுல் காந்தி சொல்லித்தான் விஜய் கட்சி தொடங்கினார்” - விஜயதாரணி தடாலடி

Published on 27/08/2024 | Edited on 27/08/2024
Vijayadharani said Vijay started  party on the advice of Rahul Gandhi

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார்.  கடந்த 22 ஆம் தேதி தேதி இந்த த.வெ.க. கொடியை அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிமுகம் செய்தார். சிகப்பு, மஞ்சள் நிறத்தில் இருந்த கொடியின் மத்தியில் யானைகள் வாகைப் பூ, 28 நட்சத்திரங்கள் எனப் பல அடையாளங்களும், குறியீடுகளும் இடம்பெற்றிருந்தனர்.

அதே சமயம் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை த.வெ.க. கொடியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறிய அக்கட்சியினர் போர்கொடி தூக்கினர். இது ஒருபுறம் இருக்க, த.வெ.க.வின் கொடி வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் கொடி போன்று இருப்பதாகச் சிலர் கூறினர்.  இப்படியாக அரசியல்  தொடங்கியது முதல் கட்சி கொடி அறிமுகப்படுத்தியது வரை ஆரம்பம் முதலே சர்ச்சைகளும், விமர்சனங்களும் த.வெ.க.வை சுற்றிச் சுழன்று வரும் நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணியின் பேச்சு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vijayadharani said Vijay started  party on the advice of Rahul Gandhi

விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்து விஜயதாரணி ஒரு தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “விஜய் தற்போது கட்சி தொடங்கியதற்குக் காரணமே ராகுல் காந்திதான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் ராகுல் காந்தியைச் சந்தித்தபோது, காங்கிரஸ் கட்சியில் ஒரு பொறுப்புதான் முதலில் கேட்டார். ஆனால், ராகுல் காந்தி, ‘நீங்கள் தமிழ்நாட்டில் பெரிய நட்சத்திரமாக இருக்கிறீர்கள்; நீங்களே தனியாக ஒரு கட்சியைத் தொடங்கி பணியாற்றலாம்’ என்று கூறினார். அதன் விளைவாகத்தான் தற்போது விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார். நான் அப்போது காங்கிரஸ் இருந்ததால் இந்த உண்மை எனக்குத் தெரியும்” என்றார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் விளவங்கோடு எம்.எல்.ஏவாக இருந்த விஜயதாரணி, கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஆனால் அவருக்கு பாஜகவிலும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்