தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் கடந்த 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டினார். மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டதோடு விஜய் தன்னுடைய கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் யார் என்பது குறித்துப் பேசி இருந்தார். அதில திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் எனப்பேசியிருந்தார்.
தொடர்ந்து சென்னையில் நவம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் , ''திராவிடம் என்பது வேறு தமிழ் தேசியம் என்பது வேறு. தமிழ் தேசியத்திற்கு நேர் எதிரில் எதிரானது திராவிடம். இரண்டும் எப்படி ஒன்றாகும்.இந்த நிலத்தை கெடுக்கும் நச்சு ஆலைகளை ஸ்டெர்லைட், மீத்தேன், ஈத்தேன் என எல்லா நச்சு திட்டங்களையும் திராவிடம் அனுமதிக்கும். நிலத்தின் வளத்தை பாதுகாக்க தமிழ் தேசியம் துடிக்கும். எதிர்த்து போராடும். இரண்டும் ஒன்றா? எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது தமிழ் தேசியம். திராவிடம் தமிழை திட்டமிட்டு அழிக்கும். இரண்டும் ஒன்றா? தமிழ் பிள்ளைகள் படிக்க வேண்டும். கல்வி என்பது மானிட உரிமை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. இது தமிழ் தேசியம். இந்த நாட்டு குடிமக்கள், பள்ளி, கல்லூரி போகின்ற மாணவர்கள், உழைப்பவர்கள் எல்லாரும் குடிக்க வேண்டும் இது திராவிடம். இரண்டும் ஒன்றா? எப்படி ஒன்றாகும்?'' என பேசியிருந்தார்.
இது நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் இடையே மோதல் போக்கை உருவாக்கியிருந்தது. இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் இருதரப்பினரும் கருத்து மோதலில் ஈடுப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தரக்குறைவான விமர்சனம் கூடாது என விஜய் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு பிறந்தநாள் என்ற நிலையில் அதற்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூகவலைத்தள பக்கத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் 'நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்' தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
— TVK Vijay (@tvkvijayhq) November 8, 2024