தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் போராட்டக் குழுவினரை சந்திக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேநேரம் தொடர்ச்சியாக அரசு சார்பில் நிலம் எடுக்கும் பணிகள் ஆகியவற்றுக்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் போராட்டக் குழுவினரை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் போராட்டக்காரர்களை வரும் 20/01/2025 ஆம் தேதி சந்திக்க அனுமதி வழங்கி காஞ்சிபுரம் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. முன்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போராட்டக்காரர்களை சந்திக்க அனுமதிகேட்டு மனு கொடுக்கப்பட்ட நிலையில் காவல்துறை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் விஜய் போராட்ட குழுவினரை சந்திக்க பல்வேறு கட்டுப்பாடுகளையும் காவல்துறை விதித்துள்ளது. அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் மட்டும் தான் மக்களை விஜய் சந்திக்க வேண்டும்; அதிக கூட்டம் கூடாமல் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான நபர்களே வரவேண்டும்; அனுமதிக்கப்பட்ட வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே வர வேண்டும்; பொதுமக்களை விஜய் சந்திக்க இரண்டு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ளலாம்; குறிப்பிட்ட நேரத்தில் தான் மக்களை விஜய் சந்தித்து முடிக்க வேண்டும்; எந்த இடத்தில் விஜய் மக்கள் சாந்திக்கு உள்ளார் என்பது குறித்து இன்று மாலைக்குள் முடிவெடுக்கப்படும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.