சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையின் புற்றுநோய் துறையின் தலைமை மருத்துவராக பணியாற்றி வந்த பாலாஜியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் விக்னேஷ்வரனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, விக்னேஷ்வரனை சிறையில் அடைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, இன்று பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜி, தான் நலமோடு இருப்பதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனக்கு அளித்திருக்ககூடிய சிகிச்சை குறித்தும் பேசியுள்ளார். மேலும், தான் நலமோடு இருப்பதாகவும், உணவு உட்கொள்வதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.