புதுக்கோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளி திருவப்பூர் பள்ளியின் ஒரே கட்டித்தில் ஒரு அறையில் வகுப்பறை மறு அறையில் கால்நடை மருந்தகம் அமைக்கப்பட்டுள்ளது. இனி மாணவர்கள் கால்நடைகளுடன் இருந்து படிக்க வேண்டுமோ என்ற நிலை ஏற்படலாம்.
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதி திருவப்பூர். இந்த பகுதியில் நகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2014 – 2015 கல்வி ஆண்டில் அந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்துள்ளது. இந்த நிலையில் தற்போது பள்ளிகள் திறந்து மாணவர்கள் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டும் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் கூடுதல் வகுப்பறைக் கட்டிடத்தில் ஒரு அறையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அடுத்த தமிழ்நாடு அரசு கால்நைட மருத்துவ கிளை நிலையம் திருவப்பூர், கவிநாடு மேற்கு என்று சுவரில் எழுதப்பட்டுள்ளது. இது பற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது கால்நடை கிளை நிலையம் திறக்கப்பட உள்ளது. அந்த நிலையத்தை மாணவர்கள் படிக்கும் வகுப்பறையிலா திறக்க வேண்டும். இது கல்வித்துறை, கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தெரியாதா? பள்ளி ஆசிரியர்கள் சொல்லி இருக்கமாட்டாங்களா? நகராட்சி எப்படி பள்ளி மாணவர்களின் வகுப்பறையை கால்நடை மருந்தகத்திற்கு கொடுக்க முன்வந்தது. காலை நேரத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சைக்காக ஒட்டி வந்து நிறுத்தி இருப்பார்கள். அந்த நேரத்தில் மாணவர்களும் வருவார்கள். அடுமாடுகளுடன் மாணவர்களும் படிக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளதை நினைத்தால் வேதனை அளிக்கிறது என்றனர்.