வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னகொல்லகுப்பம் நகரை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி ரமணி. இவர்களுக்கு ஒன்னரை வயதில் தருண் என்கிற குழந்தை. வீட்டுக்கு அருகில் பெரிய அளவில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. சுத்தம் செய்யப்படாத அந்த கழிவு நீர் கால்வாயில் குப்பைகளும், அழுக்கு நீரும் சேர்ந்து கொசு உற்பத்தியாகி வருகின்றன. அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இன்று பிப்ரவரி 7ந்தேதி மதியம் வீடு உள்ள தெருவில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளான் தருண். அவனது அப்பா வேலைக்கு வெளியே சென்றுள்ளார். தாயார் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையை அப்படியே விட்டுவிட்டு வீட்டுக்குள் தண்ணீர் குடித்துவிட்டு வரலாம் எனச்சென்றுள்ளார். தண்ணீர் குடித்துவிட்டு வெளியே வந்து பார்த்தபோது, குழந்தையை காணவில்லை.
எங்கே போனது குழந்தை என அக்கம் பக்கம் வீடுகளில் கேட்டுள்ளார், குழந்தை வரவில்லை எனக்கூறியுள்ளனர். யாராவது தூக்கி போய்விட்டார்களோ என பயந்துப்போய் அழுதபடி அந்த தெரு முழுக்கவும் ஓடியுள்ளார். எங்கும் காணவில்லை. அப்போது ஒருச்சிறுவன் குழந்தை கால்வாய் ஓரம் விளையாடிக்கொண்டு இருந்தான் நான் பார்த்தேன் எனக்கூறியுள்ளான். அதே நேரம் குழந்தை அழும் சத்தம் கேட்டது. சத்தம் வந்ததே தவிர குழந்தையை பார்க்க முடியவில்லை.
குழந்தை கழிவுநீர் கால்வாயில் விழுந்து இருப்பது தெரியவந்தது, உடனே பொதுமக்கள் சிலர் கழிவுநீர் கால்வாயில் இறங்கி தேடினர். தேடலின் முடிவில் குப்பைகளுக்கு அடியில் குழந்தை கிடந்தது. உடனே அந்த குழந்தையை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு உயிர் போராட்டத்தில் உள்ளது அக்குழந்தை.