விருதுநகரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. அவரது பேட்டி இதோ - “அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு வெளிநாட்டு சுற்றுப் பயணம் சென்றதில் மிகப்பெரிய வெற்றி. அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்குச் சென்று கால்நடை வளர்ப்பு தீவன உற்பத்தி போன்றவற்றை பார்வையிட்டாம். பால்வளத் துறை சார்பில் சேலம் மாவட்டத்தில் கால்நடை ஆராய்ச்சி மையம், பசு வளர்ப்பு இனவிருத்தி, தீவன உற்பத்தி ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்த மிகப்பெரிய பால் பண்ணை அமைக்கப்படும். லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா உள்ளிட்ட மாகானங்களுக்குச் சென்று கால்நடை வளர்ப்பினைப் பார்த்து, அதேபோல் தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், சேலம் போன்ற மலைப் பிரதேசங்களில் மிகப்பெரிய பால் பண்ணை அமைப்பதன் மூலம், தமிழகத்தில் பால் புரட்சி ஏற்படும். அதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் பணிகள் முடிக்கப்படும். நிதானமாக, வலுவாக, தரமானதாகப் பணிகள் அமையும்.

ஸ்டாலினைத் தவிர சமூக ஆர்வலர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை வரவேற்கிறார்கள். காரணம் - பொறாமை, இயலாமை, தங்களால் முடியாததை எடப்பாடி செய்துவிட்டார் என்பதுதான். எடப்பாடி வெளிநாட்டுக்குச் சென்று 2850 கோடி அளவில் தமிழகத்திற்கு முதலீடை ஈர்த்துள்ளார். எடப்பாடியின் முடிவை, தமிழகத்தின் வளர்ச்சியை அனைவரும் போற்றுகிறார்கள். 23 ஆண்டுகால வரலாற்றில் எடப்பாடி முதலமைச்சராக அனைத்து நாடுகளுக்கும் சென்று தொழில் முதலீட்டை பெற்றுள்ளார். இதனை, ஸ்டாலினைத் தவிர அனைவரும் வரவேற்கிறார்கள்.
துபாய்க்குச் சென்றபோது நடுஇரவிலும் தமிழர்கள், வெளிநாடு வாழ் இந்தியத் தமிழர்கள் அனைவரும் எங்களை வரவேற்றார்கள். முதலமைச்சர் எடப்பாடியின் நடவடிக்கை ஒரு ஆரோக்கியமான நடவடிக்கை. செம்மொழி மாநாட்டைப் போல, மெரினாவில் திரிந்தவர்களை் எல்லாம் கோட் சூட் போட்டு உட்கார வைத்தது போல இல்லாமல் உண்மையான தொழிலதிபர்கள் கலந்து கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணம் ஆகும். முதலமைச்சர் எடப்பாடி ஆண்மைத்தனமான முடிவு எடுக்கிறார். தன் வாழ்க்கையை.. தியாக வாழ்க்கையாக வாழ்ந்து, தமிழ்நாட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். இது, தமிழகம் கண்டிராத வரலாற்று திருப்புமுனை. சட்டசபையில் ஸ்டாலின் பேச முடியாமல் வெளியே சென்று வெள்ளை அறிக்கை கேட்கிறார். தமிழை விற்று தமிழர்களை ஏமாற்றி நாடகம் நடத்தி அரசியல் செய்தவர் ஸ்டாலின். இது எடப்பாடி ஆட்சி. அவரது நாடகம் எடுபடாது.
இன்னும் பல தொழில் அதிபர்கள் தமிழகத்திற்கு வந்து தொழில் தொடங்குவார்கள். வேலையில்லாத பல இளைஞர்களுக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஸ்டாலின் துணை முதல்வராக இருந்துள்ளார். புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டவுடன் உடனடியாக தொழில் துவங்க முடியாது என்பது ஸ்டாலினுக்கு தெரியும். ஆனால்.. ஸ்டாலின் பேசுவது சிறுபிள்ளைத்தனமானது. ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடுகிறார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பால் பண்ணை துவங்கப்படும். சிவகாசியில் நறுமண பால் பண்ணை துவங்கப்படும். வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் மூலம் அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, தமிழகத்தில் நாற்பதாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். மேலும் ஐம்பதாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் தினகரன் எம்ஜிஆர் ரசிகர் இல்லை. சிவாஜி கணேசன் ரசிகர். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்து வளர்த்த அதிமுகவை அவர் எதிர்க்கிறார். அதிமுகவின் எதிரியான திமுகவிடம் மறைமுகக் கூட்டணி வைத்துள்ளார் அவருடைய உண்மையான ரூபம் தெரிந்துதான் நாஞ்சில் சம்பத் அவரை விட்டுச் சென்றுவிட்டார். புகழேந்தி புலம்பிக் கொண்டுள்ளார். அவரே திமுகவிற்குச் சென்றாலும் செல்வார். தற்போது அம்மா இருந்திருந்தால் தினகரன் வாயைக் கிழித்திருப்பார். தினகரன் கூடாரம் காலியாகி விட்டது. இது எடப்பாடி பூமி. எடப்பாடி ஆட்சியை மக்கள் அனைவரும் போற்றுகிறார்கள்.” என்றார்.