மக்களவை தேர்தலையொட்டி, சேலத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு இருந்தன.
இதற்காக 330 மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 330 கட்டுப்பாட்டு கருவிகள், வாக்கை உறுதி செய்வதற்கான 314 விவிபேட் உபகரணங்கள் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்டது.
விழிப்புணர்வு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட இந்த இயந்திரங்கள், உபகரணங்கள் அனைத்தும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில், அந்த இயந்திரங்கள் அனைத்தும் புதன்கிழமை (ஏப்ரல் 24) காலையில் திருவள்ளூரில் உள்ள மாநில மைய கிடங்கிற்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இவை அனுப்பப்பட்டன.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி கூறுகையில், ''சேலம் தொகுதியில் இதுவரை 5000 தபால் வாக்குகள் வந்துள்ளன. தேர்தல் முடிந்ததும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட், கட்டுப்பாட்டு கருவிகள் அனைத்தும் சேலம் கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூலியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அங்கு மூன்று அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தவிர, நானும் அவ்வப்போது அங்கு நேரில் சென்று பார்வையிட்டு வருகிறேன். உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தினமும் காலை, மாலை சென்று ஆய்வு செய்து வருகின்றனர்,'' என்றார்.