ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ஏழு பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் தீர்மானத்தில் முடிவெடுக்காமல் இருக்கும் ஆளுநரைப் பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், சாந்தன், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9-ஆம் தேதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அமைச்சரவை பரிந்துரை அளித்த பிறகும், கடந்த 15 மாதங்களாக அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல், அரசியல் சாசன விதிகளை மீறி தமிழக ஆளுநர் செயல்பட்டுள்ளதால், அவரைப் பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தந்தை பெரியார் திராவிட கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராகவும், ஆர்.எஸ்.எஸ் அனுதாபியாகவும் இருந்தவர் ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளதால், ஆர்.எஸ்.எஸ், கொள்கைகளை எதிர்க்கும் தமிழக மக்கள் மீது வெறுப்பு உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அரசியலமைப்புக் கடமையைச் செய்யாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்திருந்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், கண்ணதாசன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.